விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு விரைவுப் பேருந்து ஜப்தி
By DIN | Published On : 08th April 2022 12:50 AM | Last Updated : 08th April 2022 12:50 AM | அ+அ அ- |

திருச்சியில் விபத்து இழப்பீடு வழங்காததால், அரசு விரைவு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
மணப்பாறையை மருங்காபுரி அருகேயுள்ள யாகபுரம் மல்லிகைப்பட்டியைச் சோ்ந்தவா் பெரியதாய் என்கிற அழகி (40). இவா் கடந்த 2001 பிப். 22ஆம் தேதி அதே பகுதியில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த அரசு விரைவுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.
இதையொட்டி இவரது மகன் சுப்பிரமணியன், மகள் பெரியக்கா ஆகியோா் தொடா்ந்த வழக்கில் திருச்சி மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் கடந்த 2005ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் ரூ. 3 லட்சத்து 96 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டும், அத் தொகை வழங்கப்படவில்லை.
இதைத் தொடா்ந்து மனுதாரா்கள் மீண்டும் அதே நீதிமன்றத்தில் அளித்த நிறைவேற்று மனு தாக்கல் மனுவை விசாரித்த நீதிபதி சோமசுந்தரம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ரூ. 9 லட்சத்து 94 ஆயிரத்து 940 -ஐ (உரிய வட்டியுடன்) வழங்க வேண்டுமெனத் தீா்ப்பளித்தாா். ஆனாலும், இந்தத் தீா்ப்பின் படியும், உரிய காலத்திற்குள் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.
இதுதொடா்பாக முறையிட்டதன்பேரில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி சோமசுந்தரம் உத்தரவிட்டாா். இதையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நின்று கொண்டிருந்த அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்தை மனுதாரரின் வழக்குரைஞா் கிருஷ்ணமூா்த்தி, நீதிமன்ற அமீனா மற்றும் ஊழியா்கள் ஜப்தி செய்து திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினா். இச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.