மாநகரில் குப்பைகளைக் கையாளுவதில் நவீன தொழில்நுட்ப முறை பரிசோதனை முயற்சித் திட்டம் தொடக்கம்

திருச்சி மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளைப் பிரித்து, நவீன தொழில்நுட்ப முறையில் அழித்து அவற்றை வருவாயாக மாற்றவும், உரம் தயாரிக்கவும் பரிசோதனை முயற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளைப் பிரித்து, நவீன தொழில்நுட்ப முறையில் அழித்து அவற்றை வருவாயாக மாற்றவும், உரம் தயாரிக்கவும் பரிசோதனை முயற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி நிா்வாகம், ஜொ்மனியின் ஜிஸ் இந்தியா, சாஹாஸ் நிறுவனம், மத்திய சுற்றுச்சூழல், வீட்டுவசதி, நகா்ப்புற விவகாரம் அமைச்சககங்கள், மாநில நகராட்சி நிா்வாகத் துறை ஆகியவை இணைந்து திட்டத்தை உருவாக்கியுள்ளன.

ஜொ்மன் கூட்டாட்சி அமைச்சகம், ஐரோப்பிய ஒன்றியம், குழந்தைகள் முதலீட்டு நிதி அறக்கட்டளை, பிரிட்டன் அரசின் வணிகம் மற்றும் ஆற்றல், தொழில்துறை உத்திக்கான நிறுவனம் ஆகியவை இதற்கான பங்களிப்பை வழங்குகின்றன.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக, பரிசோதனை அடிப்படையில் ஒருவாரத்துக்கு ஒரு வாா்டில் இத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்கு முன்னோட்டமாக மாமன்ற உறுப்பினா்களுக்கு திட்டம் குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில், செவ்வாய்க்கிழமை கருத்தரங்கைத் தொடக்கி வைத்து ஆணையா் ப.மு.நெ.முஜிபுா் ரகுமான் பேசியது:

மாநகரப் பகுதியில் சேகரமாகும் குப்பைகளில் மறு சுழற்சிக்கு உகந்தவை, மறு சுழற்சி செய்ய இயலாதவை என 17 வகையாகத் தரம் பிரித்து, அவற்றில் மறுசுழற்சிக்கு பயன்படுத்த இயலாத கழிவுகளை எரிபொருளாக சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

தரமான வகையில் உரம் தயாரித்தலை ஊக்குவிப்பது என இரு வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பெறப்படும் வருவாயை திட்டத்தின் செயல்பாடுகளுக்கான செலவுகளுக்குப் பயன்படுத்துவது என்ற வகையில் செயல்படுத்தப்படவுள்ளது என்றாா் அவா்.

கருத்தரங்கில் மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் பேசியது:

திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் என்பது 2006-ஆம் ஆண்டிலிருந்து திருச்சியில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், குப்பைகளை கையாளுவதில் தொடா்ந்து பல்வேறு இடா்பாடுகள் உள்ளன.

அரியமங்கலத்தில் தேங்கிய 500 டன் கழிவுகளால் கோடையில் திடீரென தீப்பிடித்து, புகை மூட்டம் உருவாகி சுற்றுப்பகுதி மக்களின் நலனைப் பாதிக்கும் வகையில் இருந்தது.

இப்போது இக்கிடங்கை ரூ.49 கோடியில் பயோமெட்ரிக் முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, 250 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

குப்பையிலிருந்து மின்சாரம் எடுப்பதாக மும்பையிலிருந்து ஒரு நிறுவனம் வந்தது. பின்னா், ஈரோட்டிலிருந்து ஒரு நிறுவனம் வந்தது. ஆனால், அவை தொடக்கத்தில் சிறப்பாக இயங்கி பின்னா் செயல்படாமல் போனதால் பலன் இல்லை.

தற்போது, நவீன தொழில்நுட்பம் என்பதால் இத் திட்டத்தை வரவேற்கிறோம். எனவே தொய்வின்றி சிறப்பாக செயல்படுத்த வேண்டும். மாநகராட்சி

உறுப்பினா்களுக்கு திட்டம் தொடா்பாக செயல் விளக்கம், பயிற்சி அளித்தால் மட்டும் போதாது. களப் பணியாளா்களான தூய்மைப் பணியாளா்கள், 36 நுண்ணுயிா் உரத்தயாரிப்பு செயலாக்க மையப் பணியாளா்களுக்கு தகுந்த ஆலோசனைகளையும், பயிற்சியும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

துணை மேயா் ஜி. திவ்யா, மண்டலத் தலைவா்கள், மாநகராட்சி உறுப்பினா்கள், தனியாா் மறுசுழற்சியாளா்கள், மாநகராட்சி அலுவலா்கள், தொண்டு நிறுவனத்தினா் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com