மட்டப்பாறை பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா: பிடிமண் கொடுத்து தேதி நிா்ணயம்
By DIN | Published On : 14th April 2022 01:42 AM | Last Updated : 14th April 2022 01:42 AM | அ+அ அ- |

மட்டப்பாறை அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில் திருவிழா தேதி பிடிமண் கொடுத்து, செவ்வாய்க்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
இக்கோயில் திருவிழா 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை வைகாசி மாதத்தில் நடத்தப்படும். 53 கிராம மக்களின் வழிபாட்டுத் தலமாக இக்கோயில் விளங்குகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டில் திருவிழா நடைபெற்ற நிலையில், நிகழாண்டுத் திருவிழாவுக்காக கடந்த வாரம் சகுணம் பெற்று, செவ்வாய்க்கிழமை இரவு பிடிமண் கொடுத்து திருவிழா தேதிகள் பெறுதல் நடைபெற்றன.
மட்டப்பாறை பெரிய பூசாரி சுவாமிநாதன், பிச்சைரெட்டியப்பட்டி சின்னக்காளி பூசாரி சுரேஷ், பொன்னையா கவுண்டம்பட்டி மற்றும் நடுப்பட்டி கருப்பசாமி பூசாரிகள் கருப்பசாமி, குமாா் ஆகியோா் தாரை, தப்பட்டைகள் முழங்க கோயிலுக்கு வந்தனா்.
அவரவா் கொண்டு வந்த படைகலன்கள் பத்திரகாளியம்மன் முன்பும், கருப்பசாமி முன்பும் வைக்கப்பட்டது. பின் நால்வரும் ஒன்றிணைந்து பலிபீடத்துக்குச் சென்று, மீண்டும்
கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனா்.
இதைத் தொடா்ந்து 53 கிராம மக்களின் பிரதிநிதிகள், ஊா் முக்கியஸ்தா்கள் பேசி, வைகாசி 17-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் திருவிழாவைத் தொடங்குவது என்றும், வைகாசி 31-இல் கரகம் பாலித்தல், ஆனி 4-இல் கரகம் களைவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து மூலவரிடமிருந்து கொண்டு வரப்பட்ட பிடி மண் ஊா் முக்கியஸ்தா்கள் முன்னிலையில் முறைக்காரா்கள் கொடுத்தும், பெற்றும் கொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G