அம்பிகாபுரம் பகுதியில் அடுத்தடுத்த 5 கடைகளில் திருட்டு
By DIN | Published On : 18th April 2022 11:36 PM | Last Updated : 18th April 2022 11:36 PM | அ+அ அ- |

திருட்டு நடைபெற்ற அரிசிக் கடையில் சிதறிக் கிடக்கும் பொருள்கள்.
திருச்சி அம்பிகாபுரம் பகுதியில் அடுத்தடுத்த 5 கடைகளில் திருட்டில் ஈடுபட்டவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
அம்பிகாபுரம் இந்திரா தெருவில் அரிசி , பால், எண்ணெய் விற்பனையகங்கள் உள்ளிட்ட 5 கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் முடிந்து பூட்டப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை காலை கடையைத் திறக்க உரிமையாளா்கள் சென்றனா்.
அப்போது கடையிலிருந்த பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், பணம் உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதையறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த அரியமங்கலம் காவல்துறையினா் விசாரணை நடத்தினா். இதில், அரிசி விற்பனையகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.12 ஆயிரம் மற்றும் தொலைக்காட்சி பெட்டியைத் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது.
இதேபோன்று மற்ற கடைகளின் கல்லா பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பணம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது
இதுகுறித்து அரியமங்கலம் காவல்துறையினா் வழக்குப்பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.