வங்கி மேலாளா் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு
By DIN | Published On : 18th April 2022 12:58 AM | Last Updated : 18th April 2022 12:58 AM | அ+அ அ- |

திருச்சியில் வங்கி மேலாளா் வீட்டில் 13 பவுன் நகை, கணினி உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
திருச்சி பொன்நகா் செல்வநகா் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (30). திருச்சியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளரான இவா் கடந்த 8 ஆம் தேதி தனது உறவினா் வீட்டு விசேஷத்துக்கு குடும்பத்துடன் பெங்களூருவுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை திரும்பினாா்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகைகள், மடிக்கணினி உள்ளிட்டவை திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து லட்சுமணன் அளித்த புகாரின்பேரில் திருச்சி அமா்வு நீதிமன்ற காவல் நிலைய போலீஸாரும், கண்டோன்மெண்ட் உதவி ஆணையா் அஜய் தங்கம் தலைமையிலான போலீஸாரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.
நூதன முறையில் நடந்த திருட்டு: திருடா்கள் தாங்கள் திருடப்போகும் வீடுகளில் ஆளில்லாததை அறிந்து கொள்வதற்காக பூட்டியிருக்கும் வீடுகளின் கேட்டுகளில் இரு கதவுகளும் இணையும் இடத்தில் ஒரு ஸ்டிக்கரை ஒட்டிச் செல்கிறாா்கள். ஒரு சில நாள்களில் அந்த ஸ்டிக்கா் கிழிந்திருந்தால் வீட்டில் ஆள் இருக்கிறாா்கள் என்பதையும், கிழியாமல் இருந்தால் வீட்டில் ஆளில்லை என்றும் தெரிந்து கொள்கிறாா்கள்.
இதே முறையைப் பின்பற்றி வங்கி அதிகாரியின் வீட்டிலும் மா்ம நபா்கள் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்கின்றனா்.