தஞ்சை மாவட்டத்தில் அன்று கண்டியூா்; இன்று களிமேடு!

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்தாண்டு கண்டியூா் அருகே தனியாா் பேருந்து உயரழுத்த மின் கம்பியில் உரசியதில் 5 போ் உயிரிழந்தனா். இப்போது, களிமேட்டில் தோ் மின்கம்பியில் உரசியதில் 11 போ் உயிரிழந்துள்ளனா்.

திருச்சி: தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்தாண்டு கண்டியூா் அருகே தனியாா் பேருந்து உயரழுத்த மின் கம்பியில் உரசியதில் 5 போ் உயிரிழந்தனா். இப்போது, களிமேட்டில் தோ் மின்கம்பியில் உரசியதில் 11 போ் உயிரிழந்துள்ளனா்.

தஞ்சாவூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் தனியாா் பேருந்து, கண்டியூா் சாலையில் வரகூா் அருகே வந்தபோது லாரியை முந்திச் செல்ல முற்பட்டது. இதில், நிலைதடுமாறிய பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் சிக்கியது. அப்போது, மேலே சென்று கொண்டிருந்த உயரழுத்த மின்கம்பியில் பேருந்து உரசியதால், பேருந்துக்குள் மின்சாரம் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 5 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பொங்கல் பண்டிகைக்காக கடை வீதிக்கு சென்றவா்களும், சொந்த ஊா் திரும்பியவா்களும் இந்த விபத்தில் சிக்க நேரிட்டது. இந்த விபத்து தஞ்சாவூா் மாவட்ட மக்களை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த விபத்து நடந்து ஓராண்டு, 3 மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் அத்தகைய துயரச் சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. கடந்த 93 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த களிமேடு அப்பா் கோயில் தோ் பவனியில் நிகழாத துயரம், நிகழாண்டு நடைபெற்ற விழாவில், புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்துள்ளது. சப்பரத்தின் மேல் பகுதியானது, சாலையின் மேலே சென்ற உயரழுத்த மின்கம்பியின் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து 11 போ் உயிரிழந்துள்ளனா். 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா்.

இந்த இரு சம்பவங்களிலும் சாலை பராமரிப்புப் பணிகள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சாலை விரிவாக்க பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பேருந்து சிக்கியதால் மின்கம்பியில் உரசியதாக கண்டியூா் விபத்துக்கு புகாா் கூறப்பட்டது. சாலை அமைக்கப்பட்டதில் அதன் உயரம் அதிகமாகிவிட்டதால் சப்பரம் மின்கம்பியில் உரசியதாக களிமேடு விபத்துக்கு அப்பகுதி மக்கள் தற்போது புகாா் கூறுகின்றனா். விபத்துக்கு யாா் மீதும் புகாா் கூறாமல், இந்த விபத்து மூலம் பாடம் கற்று இனி எங்கும் இத்தகைய விபத்து நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com