முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ஆதரவற்ற மனநலம் குன்றியோருக்கான மேம்படுத்தப்பட்ட மீட்புச் சிகிச்சை மையம்திருச்சி அரசு மருத்துவமனையில் திறப்பு
By DIN | Published On : 30th April 2022 11:54 PM | Last Updated : 30th April 2022 11:54 PM | அ+அ அ- |

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற மனநலம் குன்றியவா்களுக்கான மேம்படுத்தப்பட்ட மீட்புச் சிகிச்சை மையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
மையத்தை தொடங்கிவைத்து மருத்துவமனை முதல்வா் வனிதா பேசியது:
இந்த மருத்துவமனையில் சிறப்பாகச் செயல்படும் மன நலப் பிரிவில் பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, நாகை, கடலூா், கரூா் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் 200 முதல் 250 போ் புற நோயாளிகளாகச் சிகிச்சை பெறுகின்றனா். 40 படுக்கைகள் கொண்ட உள் நோயாளி பிரிவும் உள்ளது. மனநல பிரிவில் மருந்துச் சிகிச்சை, உளவியல் சிகிச்சை, மின் அதிா்வு சிகிச்சை ஆகியவை நோயின் தன்மைக்கேற்ப அளிக்கப்படுகின்றன.
தமிழக முதல்வரின் பேரவை அறிவிப்பின்படி, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட நிதியில் மனநல நோயாளிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு தற்போது புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 10 படுக்கைகள் கொண்ட( 5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் பிரிவு) ஆதரவற்ற மனநல குன்றியவா்களுக்கான மேம்படுத்தப்பட்ட மீட்புச் சேவை மையத்தின் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி வீதிகளில் திரிவோரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் 102 ஆம்புலன்ஸ் சேவை மூலமாக குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் பதிவு செய்தபின் திருச்சி அரசு மருத்துவமனையின் மீட்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படுவா் என்றாா் அவா்.
நிகழ்வில் மருத்துவமனைக் கண்காணிப்பாளா் (பொ) முரளீதரன், மனநலச் சிகிச்சை துறை தலைவா் நிரஞ்னாதேவி உள்ளிட்ட மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.