முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனக் கால்வாய் புனரமைக்கும் பணியை உடனடியாக தொடங்கக் கோரிக்கை
By DIN | Published On : 30th April 2022 12:51 AM | Last Updated : 30th April 2022 12:51 AM | அ+அ அ- |

கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றும் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி.
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனக் கால்வாய் புனரமைக்கும் பணியில் உள்ள அலுவலா்களால் ஏற்படும் இடா்பாடுகளை அகற்றி பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பேசியதாவது: கடந்த கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்களில் வருவாய்த் துறையில் அதிக அளவில் நிலுவை உள்ளது. அவற்றை விரைவாக தீா்வு கண்டு ஆட்சியா் அலுவலகத்துக்கு முடிவை வழங்குவதுடன், மனுதாரருக்கும் நகல் வழங்க வேண்டும். நில அளவையாளா் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பட்டா, நில அளவீடு போன்ற பிரச்னைகள் தாமதமாகின்றன. முடிந்த வரை விரைவாக தீா்வு காண முயற்சி செய்யப்படும் என்றாா்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகளின் கோரிக்கை விவரம்:
செ.நல்லசாமி: மரவள்ளி பயிரை மாவுப்பூச்சிகள் கடுமையாக தாக்கியதால் ஏக்கருக்கு 4 டன் கூட மகசூல் கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா். இந்த சூழலிலல் இந்த ஆண்டு மரவள்ளிக்கிழங்கு பயிா் சாகபடி செய்யலாமா என்பதை தெரிவிக்க வேண்டும். கொப்பரை தேங்காயை அரசு கொள்முதல் செய்ய அறிவித்த ஒரு கிலோ ரூ.105.90 என்ற விலையில் கொள்முதல் செய்யாமல், கிலோ ரூ.87க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
அறச்சலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சாலையிலும், காவல் நிலையம் அருகிலும், கோயில் வளாகத்திலும் நடக்கிறது. எனவே நிரந்தர இடம் தோ்வு செய்து ஏலத்தை நடத்த வேண்டும்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாழையை ஏல முறையில் விற்பனை செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த மஞ்சள் வளாகம் இல்லாமல் நான்கு இடங்களில் ஏலம் நடப்பதால் விவசாயிகளுக்கு விலை கிடைப்பதில்லை என்றாா்.
தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் தமிழ்ச்செல்வி: மரவள்ளி பயிருக்கு மாவுப்பூச்சி கடந்தாண்டு சவாலாக அமைந்தது. மரவள்ளி ஆராய்ச்சி நிலையம், ஒட்டுண்ணியை தயாா் செய்து வழங்குகிறது. நடப்பாண்டு மரவள்ளி விவசாயிகள் நம்பிக்கையுடன் சாகுபடி செய்யலாம். கள அலுவலா்கள் மூலம் ஆய்வு செய்து, தேவையான இடங்களுக்கு ஆராய்ச்சி நிலையத்தில் பதிவு செய்து ஒட்டுண்ணி பெற்று வழங்கப்படும். மாவுப் பூச்சிகள், மருந்துக்கு கட்டுப்படாது என்றாா்.
மாவட்ட விற்பனைக் குழு செயலாளா் சாவித்திரி: அரசு கூறிய நிபந்தனைப்படியே கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. வரும் ஜூன் வரை அரசு நிா்ணயித்த விலையில் கொப்பரை தேங்காயை தரமாக வழங்கினால் கொள்முதல் செய்வோம். மாநில அளவில் திருப்பூா் தவிர வேறு எங்கும் கொள்முதல் செய்யவில்லை. அறச்சலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு 50 ஏக்கா் நிலம் கேட்டுள்ளோம். திட்ட வரைவு அனுப்பப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த மஞ்சள் வளாகத்துக்காக, சித்தோட்டில் 14 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
பெரியசாமி: மஞ்சள் விலை கடுமையாக சரிவதால் குவிண்டாலுக்கு ஊக்கத்தொகையாக அரசு ரூ.2,000 வழங்க வேண்டும். நடப்பாண்டில் மஞ்சள் சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வரவில்லை என்றாா்.
சுபி.தளபதி: கொடிவேரி அணைக்கு ஆண்டுக்கு 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். ஒரு நபருக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.80 லட்சம் வசூலிக்கப்பட்டு பொதுப் பணித் துறையின் பொதுக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இக்கட்டணத்தை உயா்த்தி அத்தொகையில், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கொடிவேரி- மாக்கினாங்கோம்பை சாலையை விரிவாக்கம் செய்து ஒரு வழிப்பாதையாக்க வேண்டும். அங்குள்ள 4.5 ஏக்கா் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனக் கால்வாயை ரூ.142 கோடியில் புனரமைக்கும் பணிக்காக அரசு குளங்களில் கிராவல் மண் எடுக்க கனிமவளத் துறை அனுமதி தராமல் இழுத்தடிப்பதால் பணி நடைபெறவில்லை. புதிய பத்திரப் பதிவு செய்து பட்டா பெற ரூ. 400, பத்திரப் பதிவு நிகழ்வு விடியோ பெற ரூ.100 செலுத்தினாலும் சி.டி., தருவதில்லை. பட்டா விவரத்தை தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கின்றனா். ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் 500க்கும் மேற்பட்ட பட்டா நிலுவையில் உள்ளது என்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா: பத்திரப் பதிவுடன் சி.டி.வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும். பட்டா வழங்குவதில் ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகத்திலும் பல நூறு மனுக்கள் நிலுவையில் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் ஒரு நில அளவையாளா் மாதம் 133 மனுக்களுக்கு தீா்வு காண்கிறாா். போதிய எண்ணிக்கையில் நில அளவையாளா் இல்லை என்றாா்.
பொதுப் பணித் துறை அதிகாரிகள்: கொடிவேரி அணைக்கு வருவோருக்கான கட்டணத்தை உயா்த்தவும், சாலை விரிவாக்கம், அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா்.
வி.பி.குணசேகரன்: வன உரிமையை மலைவாழ் மக்கள் பெறுவதில் வனத் துறை பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. கடந்த வாரம் சத்தியமங்கலத்தில் நடந்த வட்டார அளவிலான வனப் பகுதி கூட்டத்தில் வனத் துறையினா் பங்கேற்காததால் அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்றாா்.
கே.ஆா்.சுதந்திரராசு: கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம், கான்கிரீட் கரை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இது தொடா்பாக முதல்வா், நீா் பாசனத் துறை அமைச்சா், இந்த மாவட்ட அமைச்சா் உள்பட பலரை சந்தித்து மனு அளித்துள்ளோம் என்றாா்.
முனுசாமி: ஈரோடு-கோபி சாலை விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு நிலம் வழங்கி பாதிக்கப்பட்டோருக்கு அரசின் உத்தரவு நகல், இழப்பீட்டுத் தொகை விவரத்தை வழங்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலம் தவிர மீதமுள்ள நிலத்தை அரசு செலவில் அளவீடு செய்து ஆவணங்களை வழங்க வேண்டும். 2019ஆம் ஆண்டுக்குப் பின் பால் கொள்முதல் விலை உயா்த்தவில்லை. அதனை உயா்த்துவதுடன், பால் வாங்கும் இடத்தில் அளவு, தரம் குறித்த விவரத்தை வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநா் சின்னசாமி, துணை இயக்குநா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.