முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
முன்னாள் படைவீரா்கள் குடும்பத்தினருக்கு உதவி
By DIN | Published On : 30th April 2022 12:36 AM | Last Updated : 30th April 2022 12:36 AM | அ+அ அ- |

திருச்சியில் நடைபெற்ற முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோருக்கான குறைதீா் கூட்டத்தில் ரூ. 4.51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் மற்றும் முன்னாள் படைவீரா்களின் குறைகளைக் கேட்டு தீா்வு காணும் வகையில் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு குறைதீா் நாள் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவரைச் சாா்ந்தோா் என 155 போ் கலந்து கொண்டனா். அனைவரும் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினா். இதேபோல, கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கும் தீா்வுகள் வழங்கப்பட்டன.
தற்போதைய கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை தொடா்புடைய துறையினருக்கு அனுப்ப ஆட்சியா் உத்தரவிட்டாா். மேலும், புதிதாக 45 மனுக்கள் பெறப்பட்டன.
இக் கூட்டத்தில், திருமண நிதியுதவியாக 2 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம், கல்வி உதவித்தொகையாக 9 பயனாளிகளுக்கு ரூ.3.05 லட்சம், ஈமச்சடங்கு நிதியுதவியாக 8 பயனாளிகளுக்கு ரூ.74 ஆயிரம், மாதாந்திர நிதியுதவியாக ஒரு பயனாளிக்கு (வாழ்நாள் முழுவதும்) ரூ.4 ஆயிரம் வழங்கும் ஆணைகள், கண் கண்ணாடி நிதியுதவியாக 4 பேருக்கு ரூ.18,800 என மொத்தம் 24 பயனாளிகளுக்கு ரூ.4.51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
தொடா்ந்து முன்னாள் படைவீரா்களுக்கான சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கும் நடத்தப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநா் ஞானசேகரன், வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் ஜ. மகாராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.