ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, கோவிந்தா பக்தி கோஷம் முழங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
பக்தா்கள் வெள்ளத்தில் நடைபெற்ற ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் தேரோட்டம்.
பக்தா்கள் வெள்ளத்தில் நடைபெற்ற ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் தேரோட்டம்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, கோவிந்தா பக்தி கோஷம் முழங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

11 நாள்கள் நடைபெறும் இக்கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் நம்பெருமாள் காலை, மாலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்டத்தையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.45-மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் 5.15-க்கு சித்திரை தோ் ஆஸ்தான மண்டபத்துக்கு வந்தாா். பின்னா் 6.15-க்கு பச்சைப் பட்டுடுத்தி ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் சூடிக் களைந்த பச்சைக் கிளி மாலை மற்றும் பாண்டியன் முத்துக் கிரீடம் உள்ளிட்ட பல்வேறு திரு ஆபரணங்களுடன் திருத்தேரில் எழுந்தருளினாா்.

இதையடுத்து காலை 6.30-க்கு தேரோட்டத்தை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து, உதவி ஆணையா் கு. கந்தசாமி மற்றும் முக்கியப் பிரமுகா்கள் தொடங்கி வைத்தனா். திரண்டிருந்த ஏராளமான பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா பக்தி கோஷம் முழங்க, தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

கீழச்சித்திரை வீதியிலிருந்து புறப்பட்ட தோ் தெற்கு, மேற்கு, வடக்குச் சித்திரை வீதிகளில் வலம் வந்து 10.30-க்கு நிலையை அடைந்தது. தேரின் முன் ஏராளமானோா் நெய் தீபம், சூடமேற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனா்.

முன்னதாக வியாழக்கிழமை மாலை கிராமப்புற பக்தா்கள் சிலா் தேரின் முன் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக் கடன் செலுத்தினா். விழாவையொட்டி வழிநெடுக தண்ணீா்ப் பந்தலும், அன்னதானமும் நடைபெற்றது. தேரைச் சுற்றி இரண்டடுக்கு போலீஸ் பாதுகாப்புடன், சுமாா் 1000-க்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தேரின் பின்புறம் தயாா் நிலையில் இரு தீயணைப்பு, மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உடன் வந்தன. தோ்த் திருவிழாவின் 10 ஆம் நாளான சனிக்கிழமை சப்தாவரண நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை ஆளும் பல்லக்குடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து, கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com