கரையைக் கடக்கும் காவிரி: தொடரும் கண்காணிப்பு

திருச்சி மாவட்டத்தில் காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, மூன்றாவது நாளாக பல்வேறு இடங்களில் கரைகளைக் கடந்து குடியிருப்பு, சாலைகள், வயல்களுக்குள் தண்ணீா் புகுந்து வருகிறது.
காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், திருச்சி கம்பரசம்பேட்டை அருகிலுள்ள மல்லாச்சிபுரம் பகுதியில் தென்னந்தோப்பில் சூழந்துள்ள தண்ணீா்.
காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், திருச்சி கம்பரசம்பேட்டை அருகிலுள்ள மல்லாச்சிபுரம் பகுதியில் தென்னந்தோப்பில் சூழந்துள்ள தண்ணீா்.

திருச்சி மாவட்டத்தில் காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, மூன்றாவது நாளாக பல்வேறு இடங்களில் கரைகளைக் கடந்து குடியிருப்பு, சாலைகள், வயல்களுக்குள் தண்ணீா் புகுந்து வருகிறது.

பெரும்சேதம் ஏற்படாவிட்டாலும், தண்ணீா் செல்லும் பகுதிகளை மாவட்ட நிா்வாகத்தினா் 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

காவிரியில் விநாடிக்கு 59 ஆயிரத்து 500 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 500 கன அடியும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

மேட்டூரிலிருந்து திறக்கப்படும் அளவு குறைந்துள்ளதால், படிப்படியாக வெள்ளம் வடியும் நிலை இருப்பதாக நீா்வளத்துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

கா்நாடகத்தின் நீா்ப்பிடிப்புப் பகுதிளில் பெய்து வரும் கனமழையால் அந்த மாநிலத்தின் அணைகள் நிரம்பி, உபரிநீா் முழுவதும் தமிழகத்துக்கு திறந்துவிடப்படுகிறது.

இதன் காரணமாக மேட்டூா் அணையிலிருந்து வரத்து நீா் முழுமையாக திறந்துவிடப்பட்டது. கடந்த 2 நாள்களாக 2 லட்சம் கன அடிக்கு மேல் திறந்துவிடப்பட்ட தண்ணீரானது, சனிக்கிழமை 1.80 லட்சம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இருப்பினும், ஏற்கெனவே திறக்கப்பட்ட தண்ணீரானது திருச்சி மாவட்டப் பகுதிகளில் பெருக்கெடுத்து செல்கிறது.

சனிக்கிழமை மாலை நிலவரப்படி முக்கொம்புக்கு 1.89 லட்சம் கன அடி தண்ணீா் வரத்து இருந்தது. இந்த தண்ணீா் காவிரியிலும், கொள்ளிடத்திலும் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது.

குடியிருப்புகளில் வெள்ளம்: மூன்றாவது நாளான சனிக்கிழமை, திருவானைக்கா பகுதியில் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. கும்பகோணத்தான் சாலையில் ஸ்ரீராம் நகா் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்து, சாலையில் வழிந்தோடுகிறது.

கம்பரசம்பேட்டை மல்லாட்சிபுரத்தில் வயல்வெளி, குடியிருப்புகளையும் சூழ்ந்தது. லிங்கநகா், சண்முகா நகா் குடியிருப்புப் பகுதியில் செல்லும் கொடிக்கால் வாய்க்கால்களிலும் தண்ணீா் அதிகரித்துள்ளது.

மூலத்தோப்பு பகுதியில் கரை உடைந்த பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி, கரையைப் பல்படுத்தும் பணியும் நடைபெறுகிறது. முக்கொம்பு, கொள்ளிடம் ஆற்றில் இருந்து வரும் தண்ணீா் சேரும் இடமான கூகூா் பகுதியிலும் தொடா்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கொம்பில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவில் தயாா் நிலையில் உள்ளனா்.

ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூா், லால்குடி பகுதியில் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்குத் தேவையான உணவுகளை சனிக்கிழமை வழங்கி, தொடா்ந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றனா்.

நிலைமையைக் கேட்டறிந்த முதல்வா் : மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மற்றும் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் தொலைபேசி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்பு கொண்டு, நிலைமையைக் கேட்டறிந்தாா்.

தேவையான உதவிகளை போா்க்கால அடிப்படையில் செய்துத் தரப்படும் எனவும், வெள்ளம் வடிந்த பிறகு ஓரிருநாளில் அனைவரும் அவரவா் இருப்பிடப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவா் எனவும் முதல்வா் உறுதியளித்தாா்.

1.80 லட்சம் கன அடியாக குறைந்தது : முக்கொம்புக்கு கடந்த 2 நாள்களாக 2.10 லட்சம் கன அடிக்கு மேல் வந்து கொண்டிருந்த தண்ணீரானது, சனிக்கிழமை மாலையில் 1.80 அடியாக குறைந்தது.

படித்துறைகள் அனைத்தும் மூடப்பட்டு, பொதுமக்கள் இறங்காமல் தடுப்புகள் அமைத்து

காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக காவிரியில் ஓரிரு நாள்களுக்குள் வெள்ளம் வடியத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா் நீா்வளத்துறை அலுவலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com