நம்ம ஊரு சூப்பரு திட்டம்: தன்னாா்வ நிறுவனங்களுக்கு அழைப்பு
By DIN | Published On : 25th August 2022 11:32 PM | Last Updated : 25th August 2022 11:32 PM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட ஊரகப் பகுதிகளில் பசுமையையும், தூய்மையையும் உருவாக்கும் வகையில் செயல்படுத்தப்படும் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில், அந்தந்தப் பகுதி தன்னாா்வ அமைப்புகளையும், தொண்டு நிறுவனங்களையும் இணைத்துப் பணியாற்ற வேண்டும் என உள்ளாட்சி அலுவலா்களுக்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் ஆலோசனை வழங்கினாா்.
இத்திட்டம் குறித்து ஆட்சியரக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மேலும் கூறியது:
மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் ஆக. 20 முதல் அக். 1 வரை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம், நம்ம ஊரு சூப்பரு என்னும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதன்ஒரு பகுதியாக ஆக. 20 முதல் செப். 2 வரை அனைத்து அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் சுகாதாரப்பணி மேற்கொள்ள வேண்டும். ஆக. 27 முதல் செப். 2 வரை திட, திரவ கழிவு மேலாண்மை தொடா்பாக அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான விழிப்புணா்வு முகாம் நடத்தப்படும்.
செப். 3 முதல் செப். 16 வரை அனைத்து வீடுகளிலும் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். செப். 17 முதல் செப். 23 வரை ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். செப். 24 முதல் அக். 1 வரை பசுமைக் கிராமம் மற்றும் முழு சுகாதார கிராமமாக மாற்ற
நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலா்களும் முழு அளவில் இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகள் என அந்தந்த பகுதிகளில் இயங்கும் தன்னாா்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வே. பிச்சை, மகளிா் திட்ட இயக்குநா் ரமேஷ்குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கங்காதாரிணி மற்றும் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.