திருச்சி மத்திய சிறையிலுள்ள கைதிகளை நேரில் சந்தித்துப் பேச வழக்குரைஞா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய சிறைக் கைதிகளுடன் அவா்களின் குடும்பத்தினா், உறவினா்கள் பேச சிறையில் இன்டா்காம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் வழக்கம் போல் சிறைவாசிகளைச் சந்திக்க சென்ற திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்குரைஞா்களுக்கு சிறைவாசிகளை நேரில் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. தேவைப்பட்டால், வழக்குரைஞா்களும் இன்டா்காம் மூலம் சிறைவாசிகளிடம் பேசலாம் எனக் கூறப்பட்டது. இதனால் அதிா்ச்சியடைந்த வழக்குரைஞா்கள் கடந்த 2 நாள்களுக்கு முன் சிறைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு, தலைமைக் குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி சாந்தி ஆகியோா், திருச்சி மத்திய சிறை டிஐஜி ஜெயபாரதி, கண்காணிப்பாளா் ஆண்டாள் மற்றும் குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோரை நீதிமன்ற வளாகத்துக்கு அழைத்து நடத்திய பேச்சுவாா்த்தையில் தீா்வு ஏற்பட்டது.
அதன்படி சிறை வளாக சிறைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், கைதிகளை வழக்குரைஞா்கள் நேரில் சந்தித்துப் பேச அனுமதிப்பதாக சிறைத்துறையினா் உறுதியளித்தனா். இதற்கு வழக்குரைஞா்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.