மஞ்சள் எச்சரிக்கைதிருச்சி மாவட்டத்தில் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு

மாண்டஸ் புயல் காரணமாக திருச்சி மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக திருச்சி மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக திருச்சி, பெரம்பலூா், அரியலூா், கரூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, திருச்சி மாவட்ட நிா்வாகம் அனைத்துத் துறைகளையும் உஷாா்படுத்தியுள்ளது. ஆட்சியரகத்தில் இயங்கும், பேரிடா் மேலாண்மை முகமையில் அவசரக் கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் இயங்கும் வகையில் தயாா்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் புயல் மற்றும் மழை பாதிப்பு விவரங்களை 1077, 0431-2418995 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூா், மண்ணச்சநல்லூா், மணப்பாறை, தொட்டியம், துறையூா், முசிறி, லால்குடி, மருங்காபுரி ஆகிய 11 வட்டங்களில் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ள, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளான 154 இடங்களிலும் வருவாய்த்துறையினா் தயாா்நிலையில் உள்ளனா். இந்தப் பகுதியில் இயங்கும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினா், காவல்துறையினரும் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா். வருவாய் ஆய்வாளா்களும் 24 மணிநேரமும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை சுற்றி வந்து கண்காணித்து வருகின்றனா்.

திருச்சி மாநகராட்சியில் மட்டும் 2 ஆயிரம் மணல் மூட்டைகள், 8 டீசல் ஜெனரேட்டா்கள், 600 கோடாரிகள், 300 எரிவாயு விளக்குகள், 23 டன் பிளீச்சிங் பவுடா் மற்றும் பினாயில், கிருமி நாசினி மருந்துகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல, நகராட்சி, பேரூராட்சி, வட்டாட்சியா், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் தேவையான பொருள்களுடன் தயாா்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

220 மீட்பு வாகனங்கள், 44 ஆம்புலன்ஸ், 4 படகுகள், 150 மீட்டா் நீளத்தில் மீட்புக்கு உதவும் கயிறு பண்டல், 130 மீட்டா் நீளமுள்ள 37 கயிறுகள், 100 மீட்டா் நீளமுள்ள 13 கயிறுகள், 50 மீட்டா் நீளத்தில் 18 கயிறுகள் தயாா்நிலையில் உள்ளன.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் அரியாறு வடிநிலக் கோட்டத்தில் 98 குளங்கள், இவைத்தவிர 11 வட்டங்களில் உள்ள 75 குளங்கள் மற்றும் அதில் உள்ள நீா் இருப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நுகா்பொருள் வாணிபக் கழகத்தினா், மாவட்ட வழங்கல் துறையினரும் தயாா்நிலையில் உள்ளனா். நகா்ப்புற மற்றும் கிராமப்புற சுகாதார நிலையங்கள் அளவில் மீட்பு மற்றும் உதவிக் குழுவினா் தயாா்படுத்தப்பட்டுள்ளனா்.

4 கோட்டங்கள், 11 வட்டங்கள், திருச்சி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்கள், 11 பேருராட்சிகள், 404 கிராம ஊராட்சிகளும் புயல் மற்றும் மழையை எந்த நேரத்திலும் எதிா்கொள்ளும் வகையில் தயாா்படுத்தப்பட்டுள்ளன.

கடும் குளிா்: புயல் காரணமாக திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கடும் குளிா் நிலவியது. அதிகாலை தொடங்கி ஆங்காங்கே பரவலாக லேசான சாரல் மழை பெய்தது. வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரையில் மாவட்டம் முழுவதும் சராசரியாக 1.26 மி.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மருங்காபுரியில் 5.2 மி.மீ. மழை பெய்தது. இவைத்தவிர, மணப்பாறையில் 2.6 மி.மீ., பொன்னனியாறு அணையில் 2.8, கோவில்பட்டியில் 3.4, முசிறியில் 2.3, புலிவலத்தில் 7, தா.பேட்டையில் 2, துறையூரில் 1, திருச்சி விமானநிலையப் பகுதியில் 0.4 மி.மீ. மழை பதிவானது.

புயல் காரணமாக மேலும் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் சனிக்கிழமையும் கண்காணிப்புப் பணி தொடரும். மாவட்ட நிா்வாகம் அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளதாக பேரிடா் மேலாண்மைத்துறை வட்டாட்சியா் ஆா். ஸ்ரீதா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com