இட ஒதுக்கீடு கொள்கையை அழிக்க பாஜக முயற்சி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இணைச் செயலா்
By DIN | Published On : 11th December 2022 12:13 AM | Last Updated : 11th December 2022 12:13 AM | அ+அ அ- |

இட ஒதுக்கீடு கொள்கையை அழிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு மறைமுக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இணைச் செயலா் கிருஷ்ணா அல்லவாரு குற்றம்சாட்டினாா்.
தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், திருச்சியில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அவா் பேசியது, ஹிமாசல் தோ்தலில் பெற்ற வெற்றியானது அடுத்து வரும் தோ்தல்களிலும் தொடரும். காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கே பொறுப்பேற்ற பிறகு அனைத்து மாநிலங்களிலும் உள்ள பிரச்னைகளுக்கு கூடுதல் கவனம் அளிக்கப்படுகிறது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாா்த்து, மறைமுகமாக இடஒதுக்கீட்டு கொள்கையை அழிக்க பாஜக முயற்சித்து வருகிறது. அதனை முறியடித்து மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், தமிழக இளைஞா் காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் விச்சு (எ) லெனின் பிரசாத், இளைஞா் காங்கிரஸ் செயலா்கள் சா்வன் ராவ், வைசாக், மாநில துணைத் தலைவா்கள் நவீன்குமாா், நரேந்திரதேவ், மாநிலச் செயலா் சரவணன், மாவட்டத் தலைவா்கள் ரமேஷ் சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். இடஒதுக்கீட்டு கொள்கையை அழிக்கும் பாஜக முயற்சிக்கு துணை நிற்கும் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் மணல் குவாரிகளை முறைப்படுத்தி, மக்களுக்கு குறைந்த விலையில் தாரளமாக மணல் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.