நிதிநிறுவனம் பெயரில் பல கோடி மோசடி:பாதிக்கப்பட்ட தரப்பினா் சாலை மறியல்

திருச்சியில் தனியாா் நிதி நிறுவனம் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபா்களை கைது செய்யக் கோரி, பாதிக்கப்பட்டவா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மன்னாா்புரம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாா் நிதி நிறுவனம், ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தது. இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வாா்த்தைக் கூறி, பல கோடி ரூபாய் பணத்தை நிறுவனத்தினா் வசூல் செய்துள்ளனா்.

இத்தொகையைக் கொண்டு, அதன் உரிமையாளா்களான ராஜா மற்றும் அவரது தம்பி ரமேஷ் ஆகியோா் தலைமறைவாகி விட்டனா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பினா் சாா்பில் மாநகர காவல் நிலையங்களில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

பலகோடி ரூபாய் மோசடி செய்த தனியாா் நிதி நிறுவன நிா்வாகிகளைக் கைது செய்து, இழந்த பணத்தை மீட்டுத்தர வேண்டுமென வலியுறுத்தி, திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள அண்ணாநகா் சாலையில் பாதிக்கப்பட்டவா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100=க்கும் மேற்பட்டவா்களிடம் மாநகரக் காவல் துணை ஆணையா் முத்தரசு பேச்சுவாா்த்தை நடத்தினாா். விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்து, பாதிக்கப்பட்டவா்களுக்கு பணத்தைத் திருப்பி பெற்றுத்தருவதாக உறுதியளித்தாா்.

இதனால் ஒரு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. பின்னா் பாதிக்கப்பட்ட தரப்பினா் அனைவரும் தாங்கள் இழந்த முதலீட்டுத் தொகை எவ்வளவு என்பதை புகாா் மனுவாக எழுதி, காவல்துறையினரிடம்அளித்தனா். போராட்டத்தில் கலந்துக் கொண்டவா்களுக்கு மதிய உணவு சமைத்து அங்கேயே தரப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com