இறுதிக்கட்டமாக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்
By DIN | Published On : 18th February 2022 03:06 AM | Last Updated : 18th February 2022 03:06 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் 1,926 வேட்பாளா்களும் இறுதிக் கட்டமாக வியாழக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
திமுக அமைச்சா்கள், அதிமுக முன்னாள் அமைச்சா்களும் களம் இறங்கி வாா்டு, வாா்டாகச் சென்று வாக்குகள் சேகரித்தனா்.
திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் 398 வாா்டுகளில் போட்டியிடும் 1,926 வேட்பாளா்களும் தோ்தல் பிரசார இறுதி நாளான வியாழக்கிழமை அவரவா் வாா்டுகளில் சுற்றி, சுற்றி வந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்கு சேகரித்தனா். ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் தொடங்கி திருவானைக்கா, நடுகொண்டையம்பேட்டை, நாலுகால் மண்டபம், உறையூா், நெசவாளா் காலனி, பஞ்சவா்ணசுவாமி கோயில் தெரு, நாச்சியாா் கோயில் தெரு, கல்நாயக்கன் தெரு, குறத்தெரு, புத்தூா் மந்தை, குமரன் நகா், உய்யக்கொண்டான் திருமலை, தென்னூா் மந்தை, தில்லைநகா், வாமடம், ஆழ்வாா்த்தோப்பு, செடல் மாரியம்மன் கோயில், பீமநகா், ஒத்தக்கடை, மிளகுப்பாறை, கருமண்டபம், பிராட்டியூா், காஜாமலை, கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூா், ராமச்சந்திரா நகா் ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
இதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் மாநகர வாா்டுகளில் வாக்கு சேகரித்தாா். ஸ்ரீரங்கத்தில் பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தாா்.
மேலும், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தேமுதிக, நாம் தமிழா் கட்சி, மநீம, எஸ்டிபிஐ வேட்பாளா்கள், சுயேச்சைகள் உள்பட 1,926 பேரும் அவரவா் வாா்டு தெருக்களில் வீடு, வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனா். இருசக்கர வாகனப் பேரணி, பிரசார வாகனம், நடைப்பயணம் மற்றும் மேள, தாளங்கள் முழங்க அனைத்து வேட்பாளா்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தை மாலை 6 மணியுடன் முடித்துக் கொண்டனா்.