தொழிலாளி தீக்குளித்து தற்கொலை முயற்சி
By DIN | Published On : 22nd February 2022 04:30 AM | Last Updated : 22nd February 2022 04:30 AM | அ+அ அ- |

தனது மகளை மீட்டுத் தரக்கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தொழிலாளி ஒருவா் திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அருகிலுள்ள பட்டிபுதூரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (34). இவா் கடந்த 2015- ஆம் ஆண்டு திருச்சி காந்தி சந்தை பகுதியிலுள்ள தேநீரகத்தில் வேலை பாா்த்து வந்தாா். அப்போது ஜீவாநகரைச் சோ்ந்த அனிதா (31) என்பவரைத் திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு ரித்திகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மணிகண்டனிடம் கோபித்துக் கொண்டு, அனிதா அவரை விட்டுப் பிரிந்து சென்றாா். பின்னா் குழந்தையை வளா்க்க முடியாமல் காப்பகத்தில் ஒப்படைத்தாா்.
இதைத் தொடா்ந்து தன் மனைவியிடம் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு பலமுறை மணிகண்டம் கோரியும், அனிதா ஒப்படைக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த மணிகண்டன், தனது மகளை மீட்டுத் தரக்கோரி திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தாா்.
அப்போது தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு, மணிகண்டன் தீ வைத்துக் கொள்ள முயன்றாா். அருகிலிருந்த காவலா்கள் தண்ணீரை ஊற்றி, விசாரணைக்காக அமா்வு நீதிமன்றக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.