கால்நூற்றாண்டு கனவு: முதன்முறையாக மலைக்கோட்டை மேயர் பதவியில் திமுக

கால்நூற்றாண்டை கடந்து முதன்முறையாக திருச்சி மாநகரத் தந்தையாக திமுகவைச் சேர்ந்தவர் அமரப்போவது உறுதியாகியுள்ளது.
திருச்சி மாநகராட்சி முகப்பு
திருச்சி மாநகராட்சி முகப்பு

திருச்சி: கால்நூற்றாண்டை கடந்து முதன்முறையாக திருச்சி மாநகரத் தந்தையாக திமுகவைச் சேர்ந்தவர் அமரப்போவது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தின் மத்தியப் பகுதியாக அமைந்துள்ள மலைக்கோட்டை மாநகரம் திருச்சியில் உள்ள மாநகராட்சி மேயர் பதவி இதுவரை பெண்களுக்கானதாக இருந்து வந்தது. தற்போது, நடைபெறும் 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குதான் பொதுப் பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. 1866ஆம் ஆண்டு ஜூலை, 8ஆம் தேதி திருச்சி நகராட்சி உதயமானது. 128 ஆண்டுகளுக்கு பிறகு, 1994ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

தொடக்கத்தில், ஸ்ரீரங்கம், பொன்மலை, கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம் உள்ளிட்ட நான்கு கோட்டங்களுடன் 60 வார்டுகள் இருந்தன. தற்போது, விரிவாக்கப்பகுதிகள் இணைக்கப்பட்டு 65 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியின் மொத்த பரப்பளவான, 167.23 சதுர கிலோ மீட்டரில் 715 கி.மீ. சாலைகள், 3,857 தெருக்கள், 2.35 லட்சம் குடியிருப்புகள், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களும் உள்ளனர்.

நகராட்சியாக இருந்த இறுதிக் கட்டத்தில், திமுகவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், நகர்மன்றத் தலைவராக இருந்தார். மாநகராட்சியான பிறகு, மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, திமுக கூட்டணியில், காங்கிரஸ், தமாகாவுக்கு இந்தப் பதவி ஒதுக்கப்பட்டது. முதல் மேயராக புனிதவள்ளி பழனியாண்டி, அவரைத் தொடர்ந்து, எமிலி ரிச்சர்ட், சாருபாலா தொண்டைமான், சுஜாதா ஆகியோர் மேயராக இருந்தனர். 2011இல் மேயர் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த எம்.எஸ்.ஆர். ஜெயா வெற்றி பெற்று மேயரானார்.

பின்னர், தேர்தல் நடைபெறாமல் தனி அலுவலர் கட்டுப்பாட்டில் இருந்துவந்த மாமன்றம் தற்போதைய தேர்தலால் மீண்டும் மக்கள் பிரதிநிதிகளால் நிரம்புகிறது. இதில், தலைமைப் பதவியான மாநகரத் தந்தை (மேயர்) யாருக்கு என்பதுதான் பிரதான கேள்வியாக இருந்தது. அதற்கும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் விடை கிடைத்துவிட்டது. மொத்தமுள்ள 65 வார்டுகளில் திமுக கூட்டணி 59 இடங்களையும், தனித்து 49 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இதன்காரணமாக மேயர் பதவி திமுக வசம் என்றாகிவிட்டது.

திமுகவில் மேயர் பதவிக்கு போட்டியெழும் சூழல் இருந்தாலும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, தனது பிரசாரத்தின்போது 27ஆவது வார்டு வேட்பாளர் மு. அன்பழகனை அந்த பதவிக்கு தலைமையிடம் பரிந்துரைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, மாநகரத் தந்தை யார் என்பதை திமுகவினர் முடிவு செய்துவிட்டனர். மாநகரத் தந்தை மட்டுமல்ல துணை மேயர்,  ஸ்ரீரங்கம், பொன்மலை, கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம் ஆகிய 4 கோட்டங்களின் தலைவர்கள் பதவியையும் திமுக கைப்பற்றுகிறது. கூட்டணிக் கட்சிகள் நிர்பந்தம் எழுந்தால் விட்டுக் கொடுக்கலாம். ஆனால்,  கூட்டணிக்கே இடம் அளிக்காத வகையில் அதிக இடங்களை கைப்பற்றியிருப்பதால் 100 சதவீதம் திமுகவினரே அனைத்து பதவிகளிலும் அமரும் நிலை உருவாகியுள்ளது.

மு. அன்பழகன்
மு. அன்பழகன்

மாநகராட்சியின் 5ஆவது மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் முதல் கூட்டம் மார்ச் 2ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக, மேயர், துணை மேயர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், திமுகவைச் சேர்ந்தவர்களே மேயர், துணை மேயர் தேர்தலில் வெற்றி பெறுவர்.

திருச்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதன்முறையாக மேயர் பதவியில் திமுகவைச் சேர்ந்தவர் அமரப்போவது அக்கட்சியினரை பெரிதும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.  1996ஆம் ஆண்டு முதல் மாநகராட்சி தேர்தல் நடைபெற்றதில், தமாகாவைச் சேர்ந்த புனிதவல்லி பழனியாண்டி மேயராக இருந்தார். 2001 மற்றும் 2006 ஆகிய 2 முறை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாருபாலா தொண்டைமான் மேயராக பதவி வகித்தார். அவரது மேயர் பதவி காலம் முடியும் முன்பே, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் மேயர் பதவியை சாருபாலா தொண்டைமான் ராஜிநாமா செய்தார். 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மேயரான சுஜாதா, மேயர் பொறுப்பேற்று 2011ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். கடந்த 2011ஆம் ஆண்டு திருச்சி மாநகராட்சிக்கு மேயரை வாக்காளர்களே நேரடியாக தேர்வு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது.

இதில், அதிமுகவைச் சேர்ந்த எம்.எஸ்.ஆர். ஜெயா, வெற்றி பெற்று மேயரானார். அதிமுக தலைமையில் 2016ஆம் ஆண்டு வரை, 5 ஆண்டு காலத்திற்கு உள்ளாட்சி அமைப்பு பதவி இருந்தது. பின்னர், கடந்த 6 ஆண்டுகளாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் நடைபெறவில்லை.

தற்போது நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் மேயரை, மாமன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. பெரும்பான்மை இடங்களை வைத்துள்ள திமுக மாநகரத் தந்தை பதவியில் அமருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com