முதலில் தடுக்க வேண்டியது பிளாஸ்டிக் உற்பத்தியைத் தான்: வணிகா் சங்கப் பேரமைப்பு
By DIN | Published On : 06th June 2022 01:33 AM | Last Updated : 06th June 2022 01:33 AM | அ+அ அ- |

பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்வோா் மீது நடவடிக்கை எடுக்காமல், வியாபாரிகளுக்கு அபராதம் விதிப்பது முறையல்ல என்றாா் வணிகா் சங்கப் பேரமைப்பு மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா.
திருச்சி மாநில மாநாட்டுக்கு நன்கொடை அளித்தவா்களுக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு மாநிலச் செயலா் வீ. கோவிந்தராஜூலு, மாநிலப் பொருளாளா் சதக்கத்துல்லா, நிா்வாகிகள் தமிழ்ச்செல்வன், ஸ்ரீதா், பாலு, தங்கராஜ் இளைஞரணி அப்துல் ஹக்கீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தலைமை வகித்த மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா மேலும் கூறியது:
மே 5 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதல்வா் ஸ்டாலின் மற்றும் அனைத்து வணிகா் சொந்தங்களுக்கும் நன்றி.
தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பிரச்னை தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் என்பது மிகப் பெரிய நிறுவனங்களின் தயாரிப்பாகும். அதன் உற்பத்தியை முதலில் தடை செய்ய வேண்டும். அதைவிடுத்து வியாபாரிகளுக்கு அபராதம் விதிப்பது கூடாது.
உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்துவதில் தவறில்லை; ஆனால் அந்த ஆய்வை எங்கு நடத்த வேண்டும் எனத் தெரிந்து நடத்த வேண்டும்.
திருச்சி அரியமங்கலம் பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரையில் பறக்கும் சாலைத் திட்டம் கொண்டுவர முடிவு செய்திருப்பது போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் என்றாா் அவா்.