திருப்பூர்: அலகுமலை கிராமத்தில் கம்பிவேலியை அகற்றக்கோரி பட்டியல் சமூகத்தினர் தர்னா
By DIN | Published On : 06th June 2022 03:12 PM | Last Updated : 06th June 2022 03:12 PM | அ+அ அ- |

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்ட அலகுமலை பட்டியல் சமூக பொதுமக்கள்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலகுமலை கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையால் போடப்பட்டுள்ள கம்பிவேலியை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அலகுமலை கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் அ.தமிழ்வேந்தன் தலைமையில் தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
அலகுமலை கிராமத்தில் கடந்த 5 தலைமுறைகளாக ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 120 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கூலித் தொழிலாளர்களாக நாங்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு கடந்த 1993 ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் நாங்கள் குடியிருக்கும் இடங்களில் இருந்து பிரதான சாலைக்குச் சென்றுவர பொதுப்பாதை இல்லை. ஆகவே, 4 ஏக்கர் நத்தம் புறம்போக்கு நிலத்தின் வழியாகவே சென்று பிரதான சாலைக்கு சென்று வந்தோம்.
இதையும் படிக்க: பல்கலை. வேந்தராக முதல்வர்: மே.வ. அமைச்சரவை ஒப்புதல்
இங்கு குடியிருக்கும் ஒரு சிலர் கிறிஸ்தவ சபைக்குச் சென்று வருவதால் சிலர் தூண்டுதலின்பேரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கான்கிரீட் சாலையை மற்றும் நடைபாதையை உள்ளடக்கி கம்பிவேலியை அமைத்தனர். இதுதொடர்பாக அப்போதைய சார் ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தி வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் கம்பிவேலியை அகற்றும்படி உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் காவல்துறை பாதுகாப்புடன் அரசு ஊழியர்களைக் கொண்டு வேலி அகற்றப்பட்டது. இந்தப் பிரச்னையின் அடிப்படையில் 40 நாள்களுக்குப் பின்னர் அப்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவராக இருந்த எல்.முருகன் நேரில் ஆய்வு செய்து பகலில் திறந்து, இரவில் மூடும்படியான கேட் அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்திருந்தார்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கேட்டைத் திறக்கும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதன் பின்னரும் கேட்டைத் திறக்காமலும், கம்பி வேலியை அகற்றாமலும் உள்ளதால் பொதுமக்கள் 2 கிலோ மீட்டருக்கும் மேல் சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது. ஆகவே, வருவாய்த்துறை அனுமதியின்றி போடப்பட்டுள்ள கேட் மற்றும் கம்பிவேலியை அகற்றி வழிப்பாதையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனர். இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்திடமும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.