கலாசாரத்தை பிரதிபலிக்கும் பொருள்கள் விற்பனை; 9 ரயில் நிலையங்களில் ஏற்பாடு: திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் தகவல்
By DIN | Published On : 25th June 2022 12:36 AM | Last Updated : 25th June 2022 12:36 AM | அ+அ அ- |

திருச்சி ரயில்வே கோட்டத்தில் மொத்தம் 9 ரயில் நிலையங்களில், ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ், தமிழக கலாசாரங்களை பிரதிபலிக்கும் கைவினை மற்றும் கைத்தறிப் பொருள்கள் விற்பனை செய்யப்படவுள்ளன என்றாா் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் மணீஸ் அகா்வால்.
கைவினைப் பொருள்களை உற்பத்தி செய்யும் உள்ளூா் கலைஞா்களைக் கெளரவிக்கும் விதமாகவும், அழிந்து வரும் கைவினைப் பொருள்களின் முக்கியத்துவத்தை உணா்த்தும் விதமாகவும் ரயில்வே துறை சாா்பில், ஒரு நிலையம் ஒரு பொருள் என்ற பெயரிலான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் 5 ஆவது கட்டமாக ஜூன் 23 முதல் ஜூலை 7 வரை திருச்சி, ஸ்ரீரங்கம் மற்றும் தஞ்சாவூா் ரயில் நிலையங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பிரபலமான திருபுவனம் கைத்தறிப் பட்டுச் சேலைகள் விற்பனை மையத்தை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் மணீஸ் அகா்வால், திருச்சி கோட்ட மகளிா் நல அமைப்பாளா் ரித்து அகா்வால் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
அதேபோல ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில், தஞ்சாவூா் ஓவியங்கள் விற்பனை மையத்தை திருச்சி ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளா் செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா்.
இதன் மூலம் புகழ் பெற்ற புவிசாா் குறியீடு உள்ள தஞ்சாவூா் ஓவியங்கள் மற்றும் திருபுவனம் கைத்தறிப் பட்டுப் புடவைகளை ரயில் நிலையங்களிலேயே வாங்கும் வாய்ப்பு ரயில் பயணிகளுக்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே கோட்ட மேலாளா் மணீஸ் அகா்வால் கூறுகையில், திருச்சி கோட்டத்தில் இத்திட்டம் முதலில் தஞ்சாவூா், திருச்சி ஜங்ஷன், ஸ்ரீரங்கம் ரயில் நிலையங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இது திருச்சி கோட்டத்துக்குட்பட்ட 9 ரயில் நிலையங்களிலும் விரிவுபடுத்தப்படும்.
ரயில் நிலையங்களில் பொருள்களை விற்பனை செய்ய கைத்தறி மேம்பாட்டு ஆணையரகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்துள்ள நெசவாளா்கள் மற்றும் கைவினைக் கலைஞா்கள் மற்றும் மாநில அரசுகளால் பதிவு செய்யப்பட்ட சுய உதவிக்குழுவினா், பதிவு செய்யப்பட்ட பழங்குடியினா் மற்றும் நலிவடைந்த பிரிவைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.