மேக்கேதாட்டு அணையை தடுக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் இணைந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அமமுக கட்சியில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
மேக்கேதாட்டு அணையை தடுக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்

திருச்சி: மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் இணைந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அமமுக கட்சியில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

கர்நாடக அரசு, மேக்கேதாட்டு அணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளதை கண்டித்து அமமுக மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் திருச்சி, சத்திரம் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் மேலும் பேசியது,

‘‘கர்நாடக மாநிலத்தில் உள்ளவர்களை நாம் சகோதர்கள் போலவே பார்க்கிறோம். ஆனால் அந்த மாநிலத்தில் ஆள்பவர்கள் நம்மை ஒரு பாகிஸ்தான் நாட்டினர் போலவே பாவிக்கின்றனர். தண்ணீர் பிரச்சனை மிகவும் சிக்கலானது. இதில் குடிநீர், விவசாயம், வாழ்வாதாரம், பொருளாதாரம் உள்ளிட்ட சமூக பிரச்சனைகள் அடங்கியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிமன்ற உத்தரவு படி மாதம் தோறும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவேண்டும்.

தமிழகத்தில் அரிசி உற்பத்தியின் இன்னும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு உச்சநீதிமன்றம், காவேரி ஆணையம் உள்ளிட்ட எதையுமே மதிப்பது இல்லை. மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கு பதில் அங்கு காடுகளை அதிகம் வளர்க்க வேண்டும். இதுதான் இரண்டு மாநிலங்களுக்கும் நல்லது. இதையும் மீறி அணை கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு கூட தண்ணீர் கிடைக்காது. சோமாலியா நாடு போலாகிவிடும் தமிழகம். இது அறிவியல் ரீதியாக தெரிந்திருந்தும் கர்நாடகா தொடர்ந்து கொடுமையான அரசியல் செய்து வருகிறது. இதை அந்த மாநிலம் நிறுத்திக்கொள்ள வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோன்ற நிலைப்பாடுகளை அந்த மாநிலஅரசு எடுத்திருக்காது.

திமுக கர்நாடகா பிரச்சனையில் 1973, 1974, 1998, 2007 ஆகிய ஆண்டுகளில் கூட்டணி என்ற தர்மத்தின் அடிப்படையில் தமிழக மக்களின் உரிமையை வெளிப்படையாகவே விட்டுக்கொடுத்த வரலாற்று பதிவுகள் உள்ளன. இதனால்தான் அங்கு தொடர்ந்து 5 அணைகள் கட்டப்பட்டுவிட்டன. மேக்கேதாட்டு விவகாரத்திலும் தற்போதுள்ள திமுக அரசு கோட்டை விட்டு விடுமோ என்ற பயம் தமிழக மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டு விட்டது.  

ஏற்கனவே தமிழக மக்கள் வாக்களித்து விட்டு தற்போது அச்சத்தில் விழி பிதுங்கிக் கொண்டிருக்கின்றனர். எனவே கர்நாடக விவகாரத்தில் வழக்கம்போல உங்கள் தந்தையை போலவே அடுக்குமொழி வசனம் பேசி மக்களின் வயிற்றில் அடித்து விடாதீர்கள். தமிழக அரசு மட்டுமின்றி மத்திய அரசும் தமிழகத்துடன் இணைந்து கர்நாடகத்தில் அணை கட்டுவதை தடுக்க வேண்டும்” என்றார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் கூட்டமைப்பு பி.ஆர்.பாண்டியன் பேசுகையில்,‘‘ பக்கத்து மாநிலம் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி தமிழக வாழ்வாதாரத்தை சாகடிக்கப் பார்க்கிறது. இதை எதிர்த்து எந்த கட்சியும் போராட்டக்களத்துக்கு வரவில்லை என்பது கொடுமை. தமிழர்களின் வாழ்வாதார பிரச்சனையில் பக்கத்து மாநில அரசு கைவைப்பதை ஆட்சியளர்கள் முதல் யாரும் கைகட்டி வேடிக்கை பார்க்கூடாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெற்றுத்தந்த உரிமையை ஆளும் அரசு காற்றில் பறக்க விட்டு விடக்கூடாது. தயவு செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தை கையில் எடுத்து போராட்டகளத்துக்கு வந்து வெற்றி பெற வேண்டும்” என்றார்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு பாதுகாப்பு விவசாய சங்க தலைவர் பி.அய்யாகண்ணு பேசுகையில்,‘‘ மிகப் பெரிய கொடுமையை சத்தமில்லாமல் கர்நாடகா செய்திருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும். கர்நாடகா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ச்சியாக 5 அணைகளை கட்டி விட்டது. தமிழக ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்ததால் தற்போது காவேரியில் தண்ணீர் வரவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவு படி மாதந்தோறும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் தமிழகத்தில் சாகுபடி பரப்பளவு குறைந்து விவசாயிகள் ‘‘வாட்சுமேன்’’ வேலைகளுக்கு செல்கின்றனர். இந்த தருனத்தில் தமிழக ஆட்சியாளர்கள் சும்மா இருந்து விட்டால் எதிர்காலத்தில் விவசாயமே கேள்விக்குறியாவதோடு டெல்டா மாவட்டங்களில் குடிநீருக்கு வாய்ப்பே இருக்காது’’ என்றார்.

நிகழ்வில்  அமமுக மாநில பொருளாளர் மனோகரன் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், அமைப்பு செயலாளர் சாருபாலா, மாநில நிர்வாகி சி.ஆர். சரஸ்வதி மற்றும் திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஆர்பாட்டத்தில் தமிழக, கர்நாடக அரசுகள் மற்றும் மத்திய அரசையும் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com