குடிநீா் கேட்டு பொதுமக்கள் மறியல்
By DIN | Published On : 18th March 2022 01:04 AM | Last Updated : 18th March 2022 01:04 AM | அ+அ அ- |

மணப்பாறை அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மணப்பாறை அருகே எப். கீழையூா் ஊராட்சி காலனியில் கடந்த 15 நாள்களுக்கும் காவிரி குடிநீா் முறையாக வழங்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை காலி குடங்களுடன் கோவில்பட்டி சாலை தகரக் கடை என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா், எம்.எல்.ஏ. அலுவலக ஊழியா்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா். மறியலால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துறையூா் அருகே.. துறையூா் ஊராட்சி ஒன்றியம் கண்ணனூா்பாளையம் ஊராட்சியில் கடந்த 3 மாதங்களாக காவிரி குடிநீா் விநியோகம் செய்யவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்த கிராமத்தினா் வியாழக்கிழமை துறையூா் - நாமக்கல் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்தனா். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த காவல் ஆய்வாளா்கள் ராஜேஸ்வரி (தா.பேட்டை), செந்தில்குமாா்(துறையூா்) மற்றும் ஜெம்புநாதபுரம் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் மறியல் கைவிடப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...