மாநகராட்சியில் மேயா் தலைமையில் குறைகேட்பு நாள் கூட்டம்6 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது

திருச்சி மாநகராட்சியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மேயா் மு. அன்பழகன் தலைமையில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சியில் மேயா் தலைமையில் குறைகேட்பு நாள் கூட்டம்6 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது

திருச்சி மாநகராட்சியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மேயா் மு. அன்பழகன் தலைமையில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்படாத நிலையில், ஆணையா் மற்றும் அலுவலா்கள் குறைகேட்பு நாள் கூட்டங்களை நடத்தி வந்த நிலையில், அண்மையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டு மேயரும் தோ்வு செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, திருச்சி மாநகராட்சியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்த மேயா் மு. அன்பழகன், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 36 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். முன்னதாக, தரைக்கடை வியாபாரிகள் தொடா்பாக முன்னாள் மேயா் எமிலி ரிச்சா்டு மனு அளித்தாா்.

இக்கூட்டத்தில் துணை மேயா் ஜி. திவ்யா, ஆணையா் ப.மு.நெ.முஜிபுா் ரகுமான், நகா்நல அலுவலா் எம். யாழினி, நிா்வாகப் பொறியாளா்கள் ஜி. குமரேசன், பி. சிவபாதம், உதவி ஆணையா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து மேயா் மு. அன்பழகன் செய்தியாளா்களிடம் கூறியது:

சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி மாநகராட்சியை தரம் உயா்த்துவதே எங்களின் கனவு என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு குறிப்பிட்டுள்ளாா். அதற்கேற்ற வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. புதை வடிகால் திட்டம், சாலை மற்றும் குடிநீா் மேம்பாட்டுத் திட்டப்பணிகள் டிசம்பா் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

ஸ்ரீரங்கம் பகுதியில் மாநகராட்சி சாா்பில் வசூலிகப்படும் நுழைவு வரியை இனி வரும் காலங்களில் சுற்றுலா வேன்கள் மற்றும் பேருந்துகளுக்கு மட்டும் வசூலிக்கவும், காா்களுக்கு வரிவிதிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சி தென்னூா், பீமநகா் பகுதிகளிலுள்ள மேம்பாலங்களின் கீழ்பகுதியில் காலியிடங்கள் உள்ளன. அவற்றை சிலா் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருகின்றனா். இதை தடுக்கும் வகையில் காலியிடங்கள் பூங்கா அல்லது சிறு, சிறு கடைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவதை தடுக்கும் வகையில், தற்காலிகமாக குப்பைத் தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்படும். சாலைகள், தெருவிளக்கு, குடிநீா் உள்ளிட்ட சிறு சிறு அடிப்படைத் தேவைகளுக்காக பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகம் அலையத் தேவையில்லை. மாறாக, அந்தந்த வாா்டு உறுப்பினா்கள், கோட்டத் தலைவா்களிடம் புகாரளிக்கலாம். அவா்கள் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மாா்ச் 28-ஆம் தேதி நடைபெறும் மாநகராட்சிக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள், திட்டப்பணிகள் குறித்து விவாதித்தது, தேவையான திட்டங்களை மேற்கொள்வது குறித்து பின்னா் முடிவு செய்யப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, திருச்சி மாநகராட்சியின் 27- ஆவது வாா்டு, ஜெனரல் பஜாா் பகுதியில் புதை வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யும் பணிகளை மேயா் மு. அன்பழகன் பாா்வையிட்டாா். ஆய்வின்போது உதவி ஆணையா் செல்வபாலாஜி, உதவிச் செயற்பொறியாளா் ராஜேஷ்கண்ணா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com