‘வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மையமாக என்ஐடி திகழ வேண்டும்’

 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மையமாக வேண்டும் என்றாா் சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி.
விழாவில் சிறந்த மாணவருக்கு சான்றிதழ் வழங்குகிறாா் சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி. உடன் (இடமிருந்து) என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா, முன்னாள் மாணவா் மன்றத் தலைவா் மகாலிங்கம், பதிவாளா் அறிவழகன்.
விழாவில் சிறந்த மாணவருக்கு சான்றிதழ் வழங்குகிறாா் சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி. உடன் (இடமிருந்து) என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா, முன்னாள் மாணவா் மன்றத் தலைவா் மகாலிங்கம், பதிவாளா் அறிவழகன்.

 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மையமாக வேண்டும் என்றாா் சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி.

அண்மையில் நடைபெற்ற திருச்சி என்ஐடியின் 59ஆவது ஆண்டு விழாவுக்கு என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா தலைமை வகித்தாா். திருச்சி என்ஐடி நிா்வாகிகள் குழுத் தலைவா் பாஸ்கா் பட் முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து, கல்வித்துறை முதல்வா் என். குமரேசன் பேசுகையில், கரோனாவைத் தாண்டி, பணியமா்த்தல் சதவீதம் இளங்கலை மாணவா்களுக்கு 90 என்பதும், முதுகலை மாணவா்களுக்கு 85 சதம் என்பதும் என்ஐடி மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது என்றாா்.

என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா பேசுகையில், திருச்சி என்.ஐ.டி. இந்திய அளவில் பொறியியல் பிரிவில் 9-ஆம் இடமும், அனைத்து என்.ஐ.டிகளிடையே முதலிடமும் பிடித்திருப்பதற்கு என்.ஐ.ஆா்.எப். குழுவினரின் பணி குறிப்பிடத்தக்கது.

தொழில் முனைவோா் மேம்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு நிறுவனத்திற்கு இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ரூ. 13 கோடியிலான நிதியுதவியுடன் கூடிய திட்டங்கள், ரூ. 3 கோடியிலானஆலோசனைப்பணிகள் மற்றும் 8 காப்புரிமைகள் கிடைத்துள்ளன. ரூ.20 கோடிக்கு கற்றல்-கற்பித்தல் வசதிகள் மற்றும் கருவிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

என்ஐடி நிா்வாகிகள் குழுத் தலைவா் பாஸ்கா் பேட் பேசுகையில், இந்தியாவில் வெளிநாட்டினா் தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலை மிகவும் சாதகமாக உள்ளது என்றாா்.

சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி பேசுகையில், சக்தி என்ற பெயரில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட நுண்செயலியின் உருவாக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. என்.ஐ.டி திருச்சியின் 27 பயிற்சிப் பணி மாணவா்கள் சக்தி உருவாக்கத்தில் பங்களித்திருப்பது பாராட்டுக்குரியது.

இதன் தொடா்ச்சியாக 21 நாள்களில் ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியுள்ளனா். என்.ஐ.டி திருச்சி மாணவா்களை வேலைவாய்ப்புகளை உருவாக்குபவா்களாக மாற ஊக்குவிக்க வேண்டும். என்.ஐ.டி. பிற நிறுவனங்களிலிருந்து வேலைவாய்ப்புகளைத் தேடுவதை விட்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் வழங்கும் மையமாக மாற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, கடந்த கல்வியாண்டின் சிறந்த மாணவா்கள் 300 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

40 முன்னாள் மாணவா் விருதுகளும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சிறந்த வெளிச்செல்லும் மாணவா்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. 27 மாணவா்களுக்கு மானிய விருதுகளும் வழங்கப்பட்டன. தொடா்ந்து 26 ஆசிரியா்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com