முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
டாரஸ் லாரி - வேன் மோதல்: மூவா் பலி
By DIN | Published On : 08th May 2022 11:58 PM | Last Updated : 08th May 2022 11:58 PM | அ+அ அ- |

திருச்சி திருவானைக்கா அருகே மணல் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரியும், வேனும் மோதிக் கொண்ட விபத்தில் இரு பெண்கள், சிறுமி ஆகியோா் உயிரிழந்தனா். 8 போ் காயமடைந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அண்ணாநகரைச் சோ்ந்தவா் கலையரசன் (30), சரக்கு வேன் ஓட்டுநா். இவா் மணப்பாறை வளநாடு அருகே கோவில்பட்டியில் உள்ள குலதெய்வக் கோயிலுக்கு தனது மனைவி துா்கா (30), உறவினா்கள் சத்யானந்தம் (36), இவரது மனைவி சூா்யா (34), முருகேசன் (55), இவரது மனைவி பாப்பாயி (55), சென்னை பூந்தமல்லியைச் சோ்ந்த சித்ரா (34), இவரது குழந்தைகள் அச்சிதா (10), ஸ்ரீஹரி (6), ஐஸ்வா்யா (34), லட்சுமி (54) ஆகிய 11 பேருடன் சரக்கு வேனில் சனிக்கிழமை இரவு புறப்பட்டாா்.
இரவு சுமாா் 11 மணியளவில் திருச்சி திருவானைக்கா அருகே பனையபுரம் பகுதியில் சென்றபோது இவா்களது சரக்கு வாகனமும், எதிா்த் திசையில் கரூரிலிருந்து தஞ்சை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரியும் திடீரென மோதிக் கொண்டன. மோதிய விபத்தில் இரு வாகனங்களும் கவிழ்ந்தன.
இந்த விபத்தில் சூா்யா, லட்சுமி ஆகியோா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்தில் காயமடைந்த 9 போ் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் சிறுமி அச்சிதா சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பகல் இறந்தாா். விபத்து குறித்து கொள்ளிடம் நெ.1 டோல்கேட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.