முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மாணவா்களுக்கு தொழில்நுட்ப வழிகாட்டி கருத்தரங்கு: பாரதிதாசன் பல்கலை. ஐஈசிடி நடத்தியது
By DIN | Published On : 12th May 2022 01:59 AM | Last Updated : 12th May 2022 01:59 AM | அ+அ அ- |

திருச்சி: பள்ளி மாணவா்களுக்கு கணினித்துறையில் நவீன தொழில்நுட்பங்களை கற்றுத்தரும் வகையிலான 3 நாள் தொழில்நுட்ப வழிகாட்டி கருத்தரங்கு திருச்சியில் நடைபெற்றது.
பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில் முனைவோா் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம் (ஐஈசிடி), மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, ஜெய்ராம் கல்வி அறக்கட்டளை, ஸ்கோபிக் எஜூடெக் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய கருத்தரங்கில் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம். செல்வம், திருச்சி என்ஐடி கணினித் துறை பேராசிரியா் எஸ்.ஆா். பாலசுந்தரம், அண்ணா பல்கலைக் கழக மின்னியல் துறைப் பேராசிரியா் எம்.பி. மோசஸ், தொழில் முனைவோா் சுய வேலை மேம்பாட்டு நிறுவன இயக்குநா் ஏ. ராம்கணேஷ், ஜெய்ராம் கல்வி அறக்கட்டளை தலைமைச் செயல் அதிகாரி ஜே. பாலகிருஷ்ணன், பொது மேலாளா் தாமஸ் ஆகியோா் பேசினா்.
இக் கருத்தரங்கில் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 10 பள்ளிகளில் இருந்து பங்கேற்ற 300 மாணவா், மாணவிகளுக்கு 3டி தொழில்நுட்பப் பயிற்சி, காணொலிக் காட்சி தொழில்நுட்பம், கணினி வழியில் புகைப்படம் மற்றும் ஓவியம் உள்ளிட்டவை கற்றுத் தரப்பட்டன. பயிற்சி பெற்ற மாணவா்கள் தாங்கள் வரைந்த ஓவியங்கள், எடுத்த புகைப்படங்கள், தயாரித்த பொருள்கள் ஆகியவற்றை கண்காட்சிக்கு வைத்திருந்தனா். மேலும், பயிற்சியின் தலைப்புகளில் அந்தந்தப் பிரிவு மாணவா்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவு விழாவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அபுல் ஹாசன் மாணவா்களுக்கு பரிசளித்தாா். பல்கலைக்கழக கல்வியியல் துணை பேராசிரியா் எஸ். அமுதா நிறைவுரையாற்றினாா். ஏற்பாடுகளை, ஐஈசிடி இயக்குநா் ஏ. ராம்கணேஷ் மற்றும் நிறுவனப் பணியாளா்கள் செய்தனா்.