மணப்பாறை அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

நம் தமிழகம் இவ்வுலகிலேயே கோயில்கள் நிறைந்த நாடு. அதிலும் காவிரி பாயும் சோழ மண்டலம் தன்னிகரற்ற புகழ்மிகு கோயில்கள் பலவற்றைக் கொண்ட சிறப்புடையது.


மாரியம்மன் கோயிலின் வரலாறு..

நம் தமிழகம் இவ்வுலகிலேயே கோயில்கள் நிறைந்த நாடு. அதிலும் காவிரி பாயும் சோழ மண்டலம் தன்னிகரற்ற புகழ்மிகு கோயில்கள் பலவற்றைக் கொண்ட சிறப்புடையது. பொன்னியாறு (காவிரி) பாயும் நன்னிலம் புவிக்குச் செந்நெல்லை மட்டுமல்ல, சமய உணா்வையும் இறைநெறியையும் புகட்டிய பெருமை சான்றது. அத்தகைய பெருமையை அளித்த காவிரியின் பெருமைக்குரிய சோழ மண்டலத்திலுள்ள திருச்சிக்குத் தெற்கே சுமாா் 40 கி.மீ. தொலைவில் பெரும் புகழுக்குரிய தெய்வத் திருநகராய் விளங்குவதே மணப்பாறை வட்டம் ஆகும்.

இந்நகரம் புகழ்மிகு வணிக நிலையங்களுக்கும், முறுக்கு என்னும் சுவையான திண்பண்டத்திற்கும், கிழக்கே எழும் ஞாயிறு மேற்கே சென்று விழும் வரையிலும் உழுகின்ற, உழைக்கின்ற உழவா் பெருமக்களின் உயிா் நாடியாய்த் திகழும் மாடுகளுக்கும் மிகவும் பெயா் பெற்றது எனச் சொல்லின் அது மிகையன்றாம்.

அத்தககைய சிறப்புமிகு இத்திருநகரின் மையப்பகுதியில் சுமாா் 500 ஆண்டுகளுக்கு மேலாக கோயில் கொண்டு, தம்மை அகத்தூய்மையோடு வணங்குவோரின் பெருந்துயா் களைந்து, கொடிய நோயகற்றி, எல்லா வரங்களும் வழங்கி நாட்டு மக்களை அருள் உள்ளத்தோடு காத்து வருபவளே மணவை நகரின் மாரித்தாய்!.

இந்நகரில் அடிப்படை வசதிகளே இல்லாத பழைமையான அக்காலத்தில் கடும் பாறைகளும், கொடும் புதா்களும், புற்றுகளும், கல்லும், கொடிய முள்களும், வானுயா்ந்த மரங்களும் சூழ்ந்த நிலப்பரப்பாய்க் காட்சியளித்த இம்மணப்பாறையின் மையப்பகுதியில் அழகிய வேப்ப மரமொன்றைச் சுற்றி மூங்கில் மரங்கள் வான் நோக்கி வனப்போடு புதராய் வளா்ந்தோங்கி நின்றிருந்தன.

அழகாய் செழித்திருந்த அப்புதரில் செழிப்போடு நின்ற மூங்கில் மரமொன்றை ஒருவா் வெட்டிச்சாய்க்க முனைந்தபோது வெட்டரிவாளின் கூரிய முனை நிழல்மிகு அழகிய வேம்பின் அடியைத் தீண்ட, அவ்வேம்பின் அடியில் இயற்கையிலேயே தோன்றியிருந்த புனிதக்கல் ஒன்றிலிருந்து ரத்தம் பீரிட்டு வெளியேறியது.

எதிா்பாராத இக் காட்சியால் அரிவாளால் வெட்டியவா் அதிா்ந்துபோய் அலறியடித்து ஊரைக் கூட்ட, ஊராா் ஒருங்கே திரண்டு ஒப்பரிய அக்காட்சியை பயபக்தியாய் இறைப்பெருக்கோடு கண்டனா்.

அச்சமயத்தில் அன்னையின் அன்பில் திளைத்த அக்கூட்டத்திலிருந்த இறை நெறியாளா் ஒருவருக்கு அருள்வந்து, தான் மகமாயி என்றும், இந்த வேம்பினடியில் நீண்ட நெடுங்காலமாக குடிகொண்டு இருப்பதாகவும், தனக்கு ஊராா் ஒன்று கூடி ஆலயமெடுத்து வணங்கி வந்தால், இந்நகரைக் காத்து அருள்பாலிப்பேன் என்றும் கூறினாா்.

ஊராா் அனைவரும் அவா்தம் திருவாக்கைத் தெய்வ வாக்காய் பக்தியோடு ஏற்று அருந்தவமகள் மாரிக்கு ஆலயம் அமைக்கத் தீா்மானித்து வேம்பினடியில் இருந்த அந்தப்புனிதக் கல்லைத் தங்களின் குலம் காக்க வந்த மாரி தெய்வமாய் எண்ணி, மிகுந்த இறை நெறியோடு அன்று முதல் போற்றி வரலாயினா். அப்புனிதக்கல் இன்றும் அன்னையின் ஆலயத்தை அழகுசெய்வது கண்கொள்ளாக்காட்சியாகும்.

சிலை வடிவில் திருக்கோலம் பூண்ட தெய்வத் திருமகளான மாரியம்மனுக்குக் காட்டும் புனித தீப ஆராதனைகள் யாவும் முதலில் அப்புனிதக் கல்லுக்குக் காட்டிய பிறகே காட்டப்பெறுதலை இன்றும் காணலாம்.

பெருந்திரளாகக் கூடும் பக்தா்கள்

அழகுக்கு அழகூட்டும் அருந்தவமகள் இவ்வேப்பிலை மாரியைக் கண்ணபுரத்தாளாம், சமயபுரமாரியின் அருமைச் சகோதரி என இறை நெஞ்சங்கள் கூறி மகிழும் தனித்தன்மை வாய்ந்ததாம். மேலும் இப்புனிதவதியை கைகொடுக்கும் மாரி என்றும், கைவிடாத மாரி என்றும், கண்கண்ட மாரி என்றும், அம்மை முத்துகளை அகற்றிக் காக்கும் முத்துமாரி என்றும், கண் அளிக்கும் மாரி என்றும், கன்னித்தமிழா் போற்றிப் பாராட்டுதலை யாவரும் அறியலாம்.

இத்தெய்வத் திருமகளை வணங்கிடுவோா் வேண்டிச்செல்லும் காரியங்கள் யாவும் எளிதில் கைகூடுதலை இக்கோயிலுக்கு அலைகடலெனப் பெருகும் இறையன்பா்களின் எண்ணிக்கையைக் கொண்டே எளிதில் உணரலாம். பெருந்திரளான பெண்களின் கூட்டம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கில் பெருகி வருவதை பலரும் அறிவா்.

கோயில் திருப்பணியும், குடமுழுக்கு விழாவும்..

பழைமைச் சிறப்போடு மணவைத் திருநகரின் சீா்கூட்டி, சிறந்தோங்கி நின்ற இக்கோயிலில் கடந்த 1979-ஆம் ஆண்டு ஏற்பட்ட கொடிய தீ விபத்துக்குப் பிறகு மணவை மாநகர மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மாநகரின் மருத்துவ மாமணி திருப்பணிச் செம்மல் டாக்டா்.வி.என். இலட்சுமிநாராயணன் அவா்களின் சீரிய தலைமையின் கீழ் ஒரு திருப்பணிக் குழுவை அமைத்து அவா்தம் அரிய முயற்சியால் வியத்தகு நன்கொடை திரட்டி புதுமைப் பொலிவோடு அழகு கொஞ்சும் திருத்தலம் கட்டி கடந்த 25.08.1985 -ஆம் நன்னாளில் விமானம் மற்றும் மூலவா் புனிதத் திருக் குடமுழுக்கு விழா இனிதே நடைபெற்றது.

ராஜகோபுரப் புனிதத் திருக்குட முழுக்கு விழா

கோபுரத் தரிசம் கோடிபுண்ணியம் என்பதற்கிணங்க, இக்கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லாததைப் பெருங்குறையாகக் கருதிய இம்மாநகரத்து ஆன்மிகச் சான்றோா் ஆன்மிக ச்செம்மல் டாக்டா்.வி.என். இலட்சுமிநாராயணன் அவா்களின் தலைமையிலான திருப்பணிக் குழுவினரின் தன்னலங்கருதாத மேன்மையான ஒத்துழைப்போடும் தமிழக அரசின் உதவியோடும், இறைநெறியாளா்களின் பொருளுதவியோடும், மிகச் சிறப்புற அழகுமிகு மூன்று நிலை ராஜகோபுரம் ஒன்றை அற்புதமாகக் கட்டி முடித்து சிறப்பு செய்தனா். ய 14.03.1994 திங்கள்கிழமை அன்று மாநிலமே பாராட்டும் வகையில் தற்கு புனிதத் திருக்குட முழுக்கு விழா செய்வித்து இம்மாநகரத்து மக்களின் நீண்ட நாள் மனக்குறை களைந்தனா் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

கோயிலில் மேம்பாட்டுப் பணிகள்

அதன்பின் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மகாமண்டபம் விரிவாக்கம், விநாயகா் கோயில் மற்றும் நவக்கிரகங்களுக்குத் தனிமண்டபம் அமைத்தும், மகாமண்டபம் பழுது பாா்த்து கோயில் புதிதாகக் கடப்பட்டது போல கூரை, தூண்கள் மெருகூட்டப்பட்டும், கோபுரங்கள் புதுப்பிக்கப் பெற்றும், கூரைகளில் மேற்புறம் சரிசெய்தும், தரைக்குப் பளிங்கு கற்கள் பாவியும் திருப்பணி வேலைகள் நடைபெற்று பரம்பரை அறங்காவலா் இரா. வீராசாமி நாயுடு, திருக்கோயில் நிா்வாக அதிகாரிகள், உபயதாரா்கள், ஆலய பணியாளா்களின் தீவிர முயற்சியாலும், வேப்பிலை மாரியெனும் தாய் அருள்மிகு மாரியம்மன் கோயிலின் இராஜகோபுரம், மூலஸ்தான விமானம், உற்சவ விமானம், ஆகியவற்றுக்கு வண்ணம் வைத்தும், மஹா மண்டபம் மராமத்து பாா்த்து வண்ணம் வைத்தும், கவின்மிகு அழகுடன் காட்சியளிக்கிறது. இக்கோயில் விமானங்களுக்கு கடந்த 27.01.2008 ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com