சரக்கு ரயில் பெட்டிகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: டிஆா்இயு வலியுறுத்தல்

தமிழகத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் மற்றும் சரக்கு ரயில்கள் பற்றாக்குறையாக உள்ளதும் மின் உற்பத்தி பாதிப்புக்கு காரணமாகியுள்ளது.

தமிழகத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் மற்றும் சரக்கு ரயில்கள் பற்றாக்குறையாக உள்ளதும் மின் உற்பத்தி பாதிப்புக்கு காரணமாகியுள்ளது. எனவே சரக்கு ரயில் பெட்டிகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என டி.ஆா்.இ.யு. தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் தக்ஷிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் தொழிற்சங்க துணைப் பொதுச் செயலா் மனோகரன் தெரிவித்தது:

மொத்த இந்திய நிலக்கரி உற்பத்தியில் 80 சதத்தை அரசு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா உற்பத்தி செய்கிறது. இந்த நிலக்கரி மற்றும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி ஆகியவற்றில் 58.23 சதவீதமானது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு ரயில்கள் வாயிலாகவே கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த 2020 -21 ஆவது நிதியாண்டில் அனல்மின் நிலையங்களுக்கு 218.11 மில்லியன் டன்கள், இரும்புத் தொழிற்சாலைகளுக்கு 52.95 மில்லியன் டன்கள், இதர பயணாளிகளுக்கு 270.42 மில்லியன் டன்கள் நிலக்கரியானது ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்தியாவின் மின் உற்பத்தியில் 59.1 சதம் அனல் மின்சாரம் மூலம்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரி உற்பத்தியை கடந்த எப்ரல் மாதம் 53.5 மில்லியன் டன்களாக அதிகரித்தது.

இதை கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில், 27.6 சதம் கூடுதலாகும். இருப்பினும் 13 சத மின்சார உற்பத்தி குறைந்தது. கோல் இந்தியா நிறுவனத்துக்கு, நிலக்கரி ஏற்றிச்செல்ல ரயில்வே துறை வழங்கி வந்த சரக்கு ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப் பட்டதால், திட்டமிட்டபடி தேவைகளுக்கு ஏற்ப அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி சென்றடையவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் 261 சரக்கு ரயில்கள் மட்டுமே நிலக்கரியைக் கையாள கோல் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.

சரக்கு ரயில் பெட்டிகள் தட்டுப்பாடுகளால் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலக்கரி எற்றிச் செல்ல, கோல் இந்தியா முன்னுரிமை அளித்தது. இதனால் நிலக்கரியை பயன்படுத்தும் இதர நிறுவனங்கள் நிலக்கரி கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாயின.

கடந்தாண்டு இதே ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் 21.3 சதம் நிலக்கரி வரத்து குறைவு. நிலக்கரி பற்றாக்குறையால் (அதாவது நிலக்கரி போதிய அளவு உற்பத்தி செய்யப்பட்டும் தேவையான நேரத்துக்கு வந்து சேராததால்) பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அலுமினியம் உற்பத்தி செய்யும் நல்கோ நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

அதாவது நாள் ஒன்றுக்கு 3,04,933 டன்கள் நிலக்கரி மட்டுமே கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளது.

மின் உற்பத்தி நிறுவனங்களுக்காக 2018-19 நிதியாண்டில் 257.76 மில்லியன் டன்கள் நிலக்கரி எடுத்துச் சென்ற ரயில்வே, 2019-20 நிதியாண்டில் 252.92 டன்கள் மட்டுமே எடுத்துச் சென்றுள்ளது. 2020-21 நிதியாண்டு அது மேலும் 218.11 டன்களாகக் குறைந்தது.

எனவே சரக்கு ரயில் பெட்டிகள் (ரயில்வே வேகன்கள்) பற்றாக்குறை, மின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி வருவது புலனாகிறது. மேலும் இந்த நிலக்கரிப் பற்றாக்குறையால் 2018-19 நிதியாண்டில் 605.84 மில்லியன் டன் நிலக்கரியைக் கையாண்ட ரயில்வே, கடந்த 2020-21 நிதியாண்டில் 541.82 மில்லியன் டன்கள் நிலக்கரி மட்டுமே கையாண்டுள்ளது.

நிலக்கரி சரக்கு போக்குவரத்து மூலம் ஆண்டுக்கு 64 மில்லியன் டன் சரக்கு வருவாயை ரயில்வே இழந்துள்ளது.

இந்திய ரயில்வேயில் தற்போது 3,02,624 சரக்கு ரயில் பெட்டிகள் (வேகன்கள்) உள்ளது போதுமானது அல்ல. மின் உற்பத்தி மற்றும் ரயில்வே துறை வருவாய்க்கு கைகொடுக்கும், சரக்கு ரயில் பெட்டிகள் (வேகன்கள்) தயாரிப்பில் ரயில்வே அமைச்சகம் கவனம் செலுத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com