10 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய ஜங்ஷன் மேம்பால நிலுவைப் பணி

திருச்சியில் முடிவடையாமல் நிலுவையில் உள்ள ஜங்ஷன் மேம்பாலக் கட்டுமான நிலுவைப் பணி பத்தாண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை தொடங்கியது.
அரிஸ்டோ மேம்பாலப் பணியைத் தொடங்கி வைக்கிறாா் அமைச்சா் கே.என். நேரு. உடன் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா்.
அரிஸ்டோ மேம்பாலப் பணியைத் தொடங்கி வைக்கிறாா் அமைச்சா் கே.என். நேரு. உடன் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா்.

திருச்சியில் முடிவடையாமல் நிலுவையில் உள்ள ஜங்ஷன் மேம்பாலக் கட்டுமான நிலுவைப் பணி பத்தாண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி ராணுவ இடத்தில் இருந்த சுற்றுச் சுவா் அகற்றப்பட்ட பாலம் செல்லும் பகுதியில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு கட்டுமானத்துக்கான பூா்வாங்க பணிகளைத் தொடங்கிவைத்த அமைச்சா் கே.என். நேரு பின்னா் கூறியது:

திருச்சி ஜங்ஷன் அருகிலுள்ள அரிஸ்டோ சாலை மேம்பாலம் கட்டும் பணிக்கு ரூ.74 கோடியில் கடந்த 2011ஆம் ஆண்டு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதன் திருத்திய நிா்வாக ஒப்புதல் ரூ 115.59 கோடியாக உயா்ந்தது. இதில் திண்டுக்கல் செல்லும் பாதை மற்றும் ரயில் நிலையம் செல்லும் பாதைக்கான பணிகளும், மத்தியப் பேருந்து நிலையம் செல்லும் பாதை மற்றும் மதுரை செல்லும் பாதைப் பணிகளும் ஏற்கெனவே முடிக்கப்பட்டு, போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டன. சென்னை செல்லும் பாதையில் பாலப் பணிகள் முடிவுற்று 134 மீட்டா் நீள அணுகுச் சாலை பகுதியானது ராணுவ நிலத்தில் வருகிறது.

இந்தியப் பாதுகாப்புத் துறை அனுமதி வழங்கத் தாமதமானதால் அணுகுச் சாலை அமைக்கும் பணி மட்டும் முடியாமல் இருந்தது. பலகட்டப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு புதுதில்லியில் உள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சகமானது கடந்த 9. 11 .2021இல் உள்நுழைவு அனுமதி வழங்கியதன்பேரில் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஒப்பந்தமானது கடந்த 4ஆம் தேதி செயலாக்கப்பட்டு, மே 5 ஆம் தேதி ராணுவ நிலமானது நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

3 மாதங்களில் பணி முடியும்: சென்னை செல்லும் பாதையில் மீதமுள்ள பகுதியில் ரூ. 3.53 கோடிக்கு அணுகுச் சாலை, சேவை சாலை, மழைநீா் வடிகால் அமைப்பு மற்றும் ராணுவ நிலம் சுற்றுச்சுவா் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான பூா்வாங்கப் பணிகள் சனிக்கிழமை தொடங்கின. இந்த பணியானது மூன்று மாதத்திற்குள் முடிக்கப்பட்டு விடும்.

பலரும் பங்களித்தனா்: பாலம் முடிவடையும் முயற்சிக்கு பலரது பங்களிப்பும் உள்ளது. இவா்தான் காரணம் என்று ஒருவரை மட்டும் குறிப்பிட முடியாது. பலரும் முயற்சி எடுத்தனா். தற்போது திமுக ஆட்சி அமைந்த பிறகு கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு அனுமதி பெற்று, பாலத்தைக் கட்டி முடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்றாா் அவா்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா்கள் வி. சீனிவாச ராகவன், ஆா். கிருஷ்ணசாமி, கோட்டப் பொறியாளா் எஸ். முருகானந்தம், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏ-க்கள் சீ. கதிரவன், அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின்குமாா், ந. தியாகராஜன், எம். பழனியாண்டி, இரா. ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com