திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி: திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிற்சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி, திருவெறும்பூர் வட்டாட்சியரகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் நவல்பட்டு பகுதியில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில்(ஓ.எப்.டி) கடந்த 2019 ஆண்டுவரை சுமார் 150 பேர் 18 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அந்த ஆண்டு புதிய ஒப்பந்த நிறுவனமானது பழைய தொழிலாளர்களை நீக்கிவிட்டு புதிய தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது. 

இதையடுத்து தங்களை மீண்டும் பணிக்கு எடுக்க வேண்டுமென கூறி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் இதுதொடர்பாக ஒப்பந்த நிறுவனமும், துப்பாக்கி தொழிற்சாலை நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தற்போது அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படும் நிலையில், புதிய ஒப்பந்த நிறுவனமாவது தங்களை மீண்டும் பணிக்கு எடுக்க வலியுறுத்தி கடந்த மே 1 ஆம் தேதி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர்.

பின்னர், இதுதொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர். இந்நிலையில் திருவெறும்பூர் வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் திருவெறும்பூர் வட்டாட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அந்த வகையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் துப்பாக்கித் தொழிற்சாலை வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் அமர்ந்து போராடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com