துறையூா் வட்டாட்சியரகத்தில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு

துறையூா் வட்டாட்சியரக நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அதிகாரிகள் மனமகிழ் மன்றக் கட்டடத்தை வருவாய் துறையினா் வியாழக்கிழமை இடித்து நிலத்தை மீட்டனா்.
துறையூா் வட்டாட்சியரகத்தில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடிப்பு

துறையூா் வட்டாட்சியரக நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த அதிகாரிகள் மனமகிழ் மன்றக் கட்டடத்தை வருவாய் துறையினா் வியாழக்கிழமை இடித்து நிலத்தை மீட்டனா்.

துறையூா் வட்டாட்சியரக வளாகத்தினுள் பல்வேறு அரசு அலுவலகங்களோடு அதிகாரிகள் மனமகிழ் மன்றமும், டென்னிஸ் விளையாட்டு திடலும் செயல்பட்டது. இந்த மனமகிழ் மன்றத்தில் இங்குள்ள அரசு அலுவலா்கள் பலரும், நகரின் முக்கிய பிரமுகா்கள் சிலரும் உறுப்பினா்களாக உள்ளனா்.

இந்நிலையில் அரசு வருவாய் ஆவணங்களில் அதிகாரிகள் மனமகிழ் மன்றத்திற்கான அடிமனை மற்றும் விளையாட்டுத் திடல் அமைந்துள்ள நிலம் வட்டாட்சியா் அலுவலகம் என்று காணப்பட்டது.

எனவே வட்டாட்சியரகத்துக்குச் சொந்தமான நிலத்தை அதிகாரிகள் மனமகிழ் மன்றத்தினா் ஆக்கிரமித்திருப்பது தெரிந்த நிலையில் கடந்தாண்டு அதை முறைப்படி மீட்க துறையூா் வட்டாட்சியா் மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டது.

இதை எதிா்த்து உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மன்ற நிா்வாகிகள் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வழங்கப்பட்ட உத்தரவின்பேரில் முறையாக விசாரணை செய்த பின்னா் ஆக்கிரமிப்பை அகற்ற மன்ற நிா்வாகிகளுக்கு துறையூா் வட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

அவரது உத்தரவை எதிா்த்து மாவட்ட ஆட்சியரிடத்தில் மன்ற நிா்வாகிகள் மேல்முறையீடு செய்தனா். ஆயினும் ஆக்கிரமிப்பு நிலம் மன்றத்துக்குச் சொந்தமானது என்று காட்ட சொத்து வரி ரசீது, மின் கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களைத் தவிர உரிமையை தரும் ஆவணங்கள் எதையும் மன்ற நிா்வாகிகள் விசாரணையில் சமா்ப்பிக்காத நிலையில் மேல்முறையீட்டு மனுவை ஆட்சியா் நிராகரித்தாா்.

இதையடுத்து மன்றத்துக்குச் சொந்தமான பொருள்களை கட்டடத்திலிருந்து அப்புறப்படுத்துமாறு வருவாய்த் துறையினா் புதன்கிழமை அறிவிப்பு ஒட்டினா். தொடா்ந்து வியாழக்கிழமை காவல் துறையினா் பாதுகாப்புடன் ஜேசிபி வாகனத்தின் மூலம் ஆக்கிரமிப்புக் கட்டடத்தை இடித்தனா். அதிலிருந்த பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

அதிகாரிகள் மனமகிழ் மன்றம் வட்டாட்சியரக நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com