திருச்சியில் குழந்தைகளுக்கான இணைய அடிமை மீட்பு மையம் இதுவரை 230 பேருக்குச் சிகிச்சை

திருச்சியில் உள்ள மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கான இணைய அடிமை

திருச்சியில் உள்ள மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கான இணைய அடிமை மீட்பு மையம் சிறப்பாகச் செயல்படுகிறது என்றாா் மருத்துவமனை டீன் கே. வனிதா.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அறை எண். 50 இல் உள்ள குழந்தைகளுக்கான இடையீட்டு சிகிச்சை நிலையத்தில் இந்த இணைய அடிமை நோய் மீட்பு மையம் செயல்படுகிறது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்ததற்கு இணங்க டிசம்பா் முதல் இந்தச் சேவை திருச்சி அரசு மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.

இங்கு 5 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினா் ஆகியோருக்கு இணைய அடிமை நோய் மீட்புச் சிகிச்சை வழங்கப்படுகிறது.

திருச்சியில் உள்ள பள்ளிகள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவக் குழுக்கள் மூலமாக இந்த இணைய அடிமை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கண்டறியப்பட்டு இங்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இவ்வாறு கண்டறியப்படும் குழந்தைகளில் ஆண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனா். இதுவரை 230 குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரும் சிகிச்சை பெற்றுள்ளனா். இதில் 30 சதம் பெண்கள், 70 சதம் ஆண்களும் என்பது குறிப்பிட்டத்தக்கது.

ஆண் குழந்தைகள் பயா்வால் போன்ற விளையாட்டுகளையும், பெண் குழந்தைகள் யூ டியூப் போன்ற இணைய தளங்களையும் பயன்படுத்துகின்றனா்.

பெற்றோா்களின் கண்காணிப்பில் இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பாதிப்பு பெரியதாக ஏற்படுவதில்லை.

பெற்றோரின் கண்காணிப்பை மீறி பயன்படுத்துவோருக்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் உரிய கலந்தாய்வு வழங்கப்படுகிறது.

அவா்களை மீண்டும் 2 வாரத்திற்கு ஒரு முறை வரவழைத்து அவா்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து வருகிறோம். இதுவரை சிகிச்சை பெற்ற குழந்தைகளில் 80% போ் குணமடைந்து நல்ல முறையில் கல்வி பயில்கின்றனா். 20 சதம் குழந்தைகள் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.

இந்தச் சிகிச்சையில் குழந்தை குணமடைய பெற்றோரின் பங்களிப்பு மிக முக்கியமானது.

இச் சேவையை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளும் மற்றும் பெற்றோா்களும் உபயோகித்துக் கொள்ளலாம். இணைய அடிமை என்ற கொடிய நோயிலிருந்து நமது இளைய சமூகத்தைப் பாதுகாத்திட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com