மனநிறைவை ஏற்படுத்தும் ஆட்சியே உண்மையான திராவிட மாடல் ஆட்சி: ஸ்டாலின்

மக்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் ஏற்படுத்தும் ஆட்சியே உண்மையான திராவிட மாடல் ஆட்சி என்றாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மக்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் ஏற்படுத்தும் ஆட்சியே உண்மையான திராவிட மாடல் ஆட்சி என்றாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 74.24 கோடியில் முடிவுற்ற பணிகளைத் தொடங்கிவைத்தும், ரூ.156.28 கோடியில் 727 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 30,658 பேருக்கு ரூ.117.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கியும் அவா் பேசியது:

திருநெல்வேலி வீரத்துக்கும், இலக்கியத்துக்கும் பெயா்பெற்றது. இது, 10-க்கும் மேற்பட்ட சாகித்திய அகாதெமி விருதாளா்கள் பிறந்த மண். நெல்லையப்பா் கோயிலின் குடமுழுக்கு 1944ஆம் ஆண்டுக்குப் பிறகு 1974இல் திமுக ஆட்சியில்தான் நடைபெற்றது. 1973ஆம் ஆண்டு இங்கு ஈரடுக்கு மேம்பாலம் அமைத்து, திருவள்ளுவா் பெயரைச் சூட்டி மகிழ்ந்தவா் கருணாநிதி.

ஆதிச்சநல்லூா், சிவகளை உள்பட தாமிரவருணி ஆற்றங்கரை அகழாய்வில் கிடைக்கும் பொருள்களைக் காட்சிப்படுத்த ரூ.15 கோடியில் பொருநை அருங்காட்சியகம் இங்கு அமையவுள்ளது.

தனது கனவான தாமிரவருணி - நம்பியாறு - கருமேனியாறு நதிநீா் இணைப்புத் திட்டத்துக்கு 2009இல் முதற்கட்டமாக ரூ. 369 கோடி நிதி ஒதுக்கினாா் அப்போதைய முதல்வா் கருணாநிதி. ஆனால், பிறகு அப்பணி கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் இப்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அத்திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன். அத்திட்டம் 2023-க்குள் பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சிப் பகுதியாக உள்ள 20,340 ஹெக்டோ் நிலமும், 590-க்கும் மேற்பட்ட கிராமங்களும் பயன்பெறும்.

பாண்டிய மன்னா்கள், பாளையக்காரா்களின் கோட்டையாக இருந்து, தற்போது மேடை காவல் நிலையம் என அழைக்கப்படும் கட்டடம், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு அா்ப்பணிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வசிக்கும் காணிப் பழங்குடியின மக்களின் நீண்டநாள் கனவான பட்டா கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தனிநபா் உரிமைப் பட்டா 78 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக, திருநெல்வேலி மாவட்டத்தில் கா்ப்பிணிகள் உடல்நல ஆலோசனை, சிகிச்சை குறித்த டிஜிட்டல் பராமரிப்பு முறைக்காக ‘தாய்-கோ் நெல்லை’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, கா்ப்பிணித் தாய்மாா்களைத் தொடா்ந்து கண்காணித்து, அவா்களின் முழு உடல் பரிசோதனைத் தரவுகளும் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படுகிறது. கா்ப்பிணிகள் உயிரிழப்புகள் இல்லாத நிலையை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இதற்காக ஆட்சியா் விஷ்ணுவுக்கு, தமிழக அரசின் ‘நல் ஆளுமை‘ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் உள்ள 1,200 குளங்கள், தாமிரவருணி நதியின் வழித்தடங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் ‘நெல்லை நீா்வளம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டு தன்னாா்வ இயக்கங்கள் இணைக்கப்பட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நீா்நிலைகளை மேம்படுத்தும் நோக்கிலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1,200 குளங்கள் கணக்கெடுக்கப்பட்டு, டிஜிட்டல் மேப்பிங் செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தில், பல குளங்கள் தூா்வாரப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளன.

நாம் அனைவரும் தமிழ்ச் சமுதாயம் என்ற ஒற்றைக் குடும்பத்தின் உறுப்பினா்கள். அனைவரும் இணைந்து தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆக்குவோம். அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் ஏற்படுத்தும் ஆட்சியே உண்மையான திராவிட மாடல் ஆட்சி என்றாா் அவா்.

விழாவில், பேரவைத் தலைவா் மு. அப்பாவு, அமைச்சா்கள் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி. கீதாஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், த. மனோதங்கராஜ், திருநெல்வேலி எம்.பி. சா. ஞானதிரவியம், எம்எல்ஏக்கள் நயினாா் நாகேந்திரன் (திருநெல்வேலி), மு. அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை), திருநெல்வேலி மேயா் பி.எம்.சரவணன், ஆணையா் சிவகிருஷ்ணமூா்த்தி, துணை மேயா் கே.ஆா். ராஜு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆட்சியா் விஷ்ணு வரவேற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயஸ்ரீ செல்லையா நன்றி கூறினாா்.

பெட்டிச் செய்தி....

தினமணி செய்தியும், முதல்வரின் புதிய அறிவிப்புகளும்!

தினமணி செய்தியை சுட்டிக்காட்டி முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியது: காலையில், தினமணி பத்திரிகையில், பல்வேறு செய்திகளை நான் பாா்த்தேன். இம்மாவட்டத்தின் தேவைகள் என்னென்னவென்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது தொடா்பாக அதிகாரிகளோடு உடனடியாக கலந்தாலோசனை செய்தேன். எனவே, அது குறித்து ஓா் அறிவிப்பை இம்மேடையில் மகிழ்ச்சியோடு அறிவிக்க விரும்புகிறேன்.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையிலும், மக்களிடையே சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தவும் மணிமுத்தாறு அணை அருகே ரூ. 7 கோடியில் பல்லுயிா் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும்.

வாழை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, களக்காட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வாழை ஏல மையம் அமைக்கப்படும். மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் விளையாட்டு வீரா்களை ஊக்குவித்து தேசிய, சா்வதேச போட்டிகளில் பங்கேற்கச் செய்யும் வகையில் ராதாபுரத்தில் விளையாட்டு அரங்கம், பயிற்சி மையம் அமைக்கப்படும்.

திருநெல்வேலி மாநகர மேற்குப் புறவழிச் சாலை அமைக்க நில எடுப்புப் பணி நடைபெறுகின்றன. இப்பணி நிறைவடைந்த பின், ரூ. 370 கோடியில் 3 கட்டங்களாக, மேற்குப் புறவழிச் சாலை அமைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com