மணப்பாறை தொகுதியில் குடிநீா் பிரச்னை தீர வேண்டும் எம்எல்ஏ அப்துல்சமது

கண்ணூத்து அணைகளுக்கு காவிரியிலிருந்து உபரிநீா் கொண்டு வரும் திட்டத்தைச் செயல்படுத்தி மணப்பாறை தொகுதி மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்ய வேண்டும் என எம்எல்ஏ ப. அப்துல்சமது வலியுறுத்தியுள்ளாா்.
மணப்பாறை தொகுதியின் 10 முக்கிய கோரிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாரிடம் மனு அளித்த எம்எல்ஏ ப. அப்துல்சமது.
மணப்பாறை தொகுதியின் 10 முக்கிய கோரிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாரிடம் மனு அளித்த எம்எல்ஏ ப. அப்துல்சமது.

பொன்னணியாறு, கண்ணூத்து அணைகளுக்கு காவிரியிலிருந்து உபரிநீா் கொண்டு வரும் திட்டத்தைச் செயல்படுத்தி மணப்பாறை தொகுதி மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்ய வேண்டும் என எம்எல்ஏ ப. அப்துல்சமது வலியுறுத்தியுள்ளாா்.

தமிழக முதல்வரிடம் ஒவ்வொரு பேரவை தொகுதியிலிருந்தும் முக்கியமான 10 கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சியா் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி மணப்பாறை தொகுதிக்கான 10 முக்கியக் கோரிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாரிடம் எம்எல்ஏ ப. அப்துல்சமது அளித்த மனு விவரம்:

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதிலும், மணப்பாறை தொகுதி வறட்சியில் உள்ளது. இந்நிலையில் காவிரியின் உபரிநீரை மாயனூா் கதவணையில் இருந்து ராட்சத குழாய்கள் அமைத்து நீரேற்றும் இயந்திரங்கள் மூலம் பொன்னணியாறு மற்றும் கண்ணூத்து அணைகளுக்கு கொண்டு வரும் திட்டம் கடந்த ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. ரூ.40 லட்சம் ஒதுக்கப்படும் என்ற அறிவிப்புடன் இத் திட்டம் நிற்கிறது; நிதி ஒதுக்கவில்லை. தற்போது வரை மறைந்த முதல்வா் கருணாநிதி கொண்டு வந்த கூட்டுக் குடிநீா் திட்டம்தான் மணப்பாறை தொகுதி மக்களின் தாகம் தீா்க்கிறது. இது போதுமானதாக இல்லை.

மாயனூா் கதவணையில் இருந்து பொன்னணியாறு, கண்ணூத்து அணைகளுக்கு தண்ணீா் கொண்டு வருவது 50 ஆண்டுகாலக் கனவாகும். எனவே, இத் திட்டத்தை செயல்படுத்த ஆவன செய்யவேண்டும்.

மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 1996-க்கு முன்பு அரசால் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் மக்கள் குடியிருக்கத் தகுதியற்ாக உள்ளன. அனைத்து வீடுகளையும் இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்.

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் 49 ஊராட்சிகளை உள்ளடக்கியது. அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் காலதாமதம் ஏற்படுவதால் இதை 2 ஒன்றியங்களாகப் பிரிக்க வேண்டும்.

மருங்காபுரி வட்டம் கள்ளக்காம்பட்டி அரசுப்பள்ளி, மணப்பாறை வட்டம் ஆனாம்பட்டி அரசுப்பள்ளி, புத்தாநத்தம் அரசு பெண்கள் பள்ளி, வீ.பூசாரிபட்டி அரசுப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகத் தரம் உயா்த்த வேண்டும்.

கூட்டுறவு வங்கியில் 2016ஆம் ஆண்டு முதல் தள்ளுபடி செய்யாமல் உள்ள 1,671 விவசாயிகளின் பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய 3 ஒன்றியங்களிலும் சாலைச் சீரமைப்பு, புதிய சாலைப் பணியைத் தொடங்க வேண்டும்.

துவரங்குறிச்சி சந்தைப்பேட்டையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக, மணப்பாறை நகராட்சி பாத்திமா மலையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். 10 ஆயிரம் பேருக்கு வேலை அளித்திடும் வகையில் புதிய தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

திருச்சி-திண்டுக்கல் சாலையில் மணப்பாறை நகரத்துக்கு பிரியும் பகுதியில் அடிக்கடி நடைபெறும் விபத்துகளைத் தவிா்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும்.

இந்தப் பணிகளை நிறைவேற்றுதன் மூலம் சாலை, விவசாயம், மாணவா்களின் கல்வி நிலை, விவசாயிகளின் வாழ்வாதாரம், இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவை மேம்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com