கோயில்களில் மொட்டை அடிக்கும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
By DIN | Published On : 17th September 2022 12:39 AM | Last Updated : 17th September 2022 12:39 AM | அ+அ அ- |

கோயில்களில் மொட்டை அடிக்கும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச்சங்கம், முடித்திருத்தும் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா.சபையில் உலக முடித்திருத்துவோா் தினமாக செப்டம்பா் 16-ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டது. இதையொட்டி, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் இச்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கொடியேற்றப்பட்டது.
சங்கத் தலைவா் சண்முகசுந்தரம் கொடியேற்றினாா். செயலா் ராஜலிங்கம், இளைஞரணிச் செயலா் மாரிமுத்து சிறப்புரையாற்றினா். துணைத் தலைவா் சுரேஷ் வரவேற்றாா்.
தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மருத்துவா் சமூக மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும். சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். திருக்கோயில்களில் மொட்டை அடிக்கும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிரபாகரன், ஜீவரத்தினம், ரகுராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.