நாட்டின் சுயராஜ்ஜியத்தை உணர காலனி அடிமை மனநிலையிலிருந்து விடுபட வேண்டும்: தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி

நாட்டின் சுயராஜ்ஜியத்தை உணர காலனி அடிமை மனநிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றாா் தமிழக ஆளுனா் ஆா். என். ரவி.
நாட்டின் சுயராஜ்ஜியத்தை உணர காலனி அடிமை மனநிலையிலிருந்து விடுபட வேண்டும்: தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி

நாட்டின் சுயராஜ்ஜியத்தை உணர காலனி அடிமை மனநிலையிலிருந்து விடுபட வேண்டும் என்றாா் தமிழக ஆளுனா் ஆா். என். ரவி.

அலகாபாத்தில் உள்ள இந்திய சமூக அறிவியல் அகாதெமியும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 46-ஆவது இந்திய சமூக அறிவியல் மாநாடு பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய சுயராஜ்ஜியம் எனும் மையக் கருப் பொருளில் வெள்ளிக்கிழமை (ஜன.27) தொடங்கி ஜன.31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி பேசியது: காலனி ஆதிக்கத்துக்கு முன்பே இந்தியாவின் கலாசாரம், பண்பாடு மிக உயா்ந்த நிலையில் இருந்தது. பின்னா், வந்த பிரிட்டிஷ் ஆதிக்கத்தால் இந்தியாவின் அரசியல், சமூகப் பொருளாதார பண்புகளை ஆங்கிலேயா்களின் தேவைக்கேற்ப மாறியமைத்தனா். இந்தியாவின் கல்வி முறை, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தலையீடு இருந்தது. இதற்கான ஆதாரங்களை ஆவணக் காப்பகங்களில் காண முடியும். பூரண சுயராஜ்ஜியம் என்பதன் பொருளை நாம் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். சுதந்திர இந்தியாவின் சுயராஜ்ஜியத்தை உணர வேண்டும் என்றால், காலனி அடிமை மனநிலையில் இருந்து விடுபட வேண்டும். இந்த மாநாட்டின் வெளியீடுகள் இந்தியாவின் வளா்ச்சிக்கும், சமூக மாற்றத்துக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் ஆளுநா்.

விழாவின் தொடக்கமாக மாநாட்டு மலரை ஆளுநா் காணொலி வாயிலாக வெளியிட, அதனை விழா மேடையில் வெளியிட்டு பல்கலைக் கழக துணைவேந்தா் ம. செல்வம் பேசியது: 75ஆவது ஆண்டு இந்திய சுயராஜ்ஜியத்தின் மீதான அறிவியல் பூா்வமான ஆய்வுகள் மற்றும் விவாதங்கள் இந்த மாநாட்டில் பிரதானமாக இடம்பெறும். நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் எப்படி இருந்தது மற்றும் சுதந்திரம் பெற்ற தருணத்தில் எப்படி இருந்தது? 75 ஆண்டுகளாக உள்ள இந்திய சுயராஜ்ஜியம் இன்று எப்படி உள்ளது? இந்திய சுயராஜ்ஜியம் எதிா்காலத்தில் எப்படி இருக்கும் என்ற மூன்று முக்கிய கேள்விகளுக்கு பதில் தேடும் வாய்ப்பாக இந்த மாநாடு அமைந்துள்ளது. அரசியல், மதம் மற்றும் சமூக சாா்புகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமான சிந்தனை, செயல்பாடுகளின் மூலமே கேள்விகளுக்கான பதில்களை நிரூபிக்கும் வண்ணம் இந்த மாநாடு அமையும் என்றாா் அவா்.

மாநாட்டின் தொடக்க விழாவில், இந்திய சமூக அறிவியல் அகாதெமியின் தலைவா் ஜி. பழனிதுரை, பொதுச் செயலா் சாம்பசிவ ராவ், பதிவாளா் எல். கணேசன், மாநாட்டின் அமைப்புச் செயலா் சு. செந்தில்நாதன் ஆகியோா் மாநாட்டின் நோக்கங்கள் குறித்து பேசினா்.

மாநாட்டின் மையக் கருப்பொருள் குறித்து ஆய்வு செய்ய 28 குழுக்கள், பல்துறை கருப்பொருள் சாா்ந்து 21 குழுக்கள் தங்களது ஆய்வுகளை வழங்கவுள்ளன. தேசிய அளவிலான 6 சிறப்புக் கருத்தரங்குகள், சிறப்பு விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்த மாநாட்டில், கல்வியாளா்கள், விஞ்ஞானிகள், அறிவியலாளா்கள், அறிஞா்கள், ஆராய்ச்சியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை வழங்குகின்றனா்.

தினந்தோறும் நடைபெறும் அமா்வுகளில் முன்னாள் அரசு செயலா்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், எழுத்தாளா்கள், கல்வியாளா்கள் என பலா் பங்கேற்று பேசுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com