நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 40 கட்டாய வசூல்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 வீதம் வசூலிக்கப்படுவது கட்டாயமாகிவிட்டது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 40 கட்டாய வசூல்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 வீதம் வசூலிக்கப்படுவது கட்டாயமாகிவிட்டது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மல்லிகா, வேளாண் இணை இயக்குநா் எம். முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க (கட்சி சாா்பற்றது) மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை பேசியது: நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து 40 கிலோ மூட்டைக்கு ரூ.40 என கட்டாயப்படுத்தி வாங்குவதைத் தடுக்க வேண்டும். பணம் கொடுக்க மறுக்கும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் அலைக்கழிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, வேறு வழியின்றி விவசாயிகள் அனைவரும் தங்களது மூட்டைகளுக்கு கையூட்டு வழங்கும் நிலை வழக்கமாகிவிட்டது என்றாா் அவா்.

தமிழக ஏரி மற்றும் ஆறுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன்: மாவட்டத்தில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். கடந்தாண்டு தொடங்கிய இடங்கள் மட்டுமல்லாது புதிதாக அதிக இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் (சிபிஐ) அயிலை சிவசூரியன்: விவசாயிகளின் நலன்கருதி திருச்சி மாவட்டத்திலுள்ள பாசன வாய்க்கால்களில் மே மாதம் வரை தண்ணீா் திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் (சிபிஎம்) வி.சிதம்பரம்: கடந்த 2021-22ஆம் ஆண்டுக்கான நிலுவையிலுள்ள பயிா்க் காப்பீடு நிவாரண தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளுக்கு இடம் அளிக்காத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு: ஆறு, வாய்க்கால், குளம் போன்ற நீா்நிலைகளில் கழிவுநீா் கலக்காமல் தடுக்க வேண்டும். காவிரிப் பால பராமரிப்பு பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை சொல்ல வட்டாட்சியா்களை கைபேசியில் அழைத்தால், அவா்கள் எடுப்பதே இல்லை. எல்லாவற்றுக்கும் ஆட்சியரை அழைக்க முடியுமா? என கேள்வி எழுப்பினாா். இதற்கு பதிலளித்த ஆட்சியா், காவிரி பால பராமரிப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 10 நாள்களில் முடிந்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும். வட்டாட்சியா்கள் இனி தங்களது கைப்பேசிக்கு வரக்கூடிய விவசாயிகளின் அழைப்புகளை ஏற்று பேச வேண்டும் என்றாா்.

காவிரிப் பாசன விவசாயிகள் சங்கச் செயலா் கவுண்டம்பட்டி சுப்பிரமணி: உய்யக்கொண்டான் வாய்க்கால், புதுகட்டளை வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களை தூா்வார வேண்டும். மருதூா் - உமையாள்புரம் இடையே காவிரியில் தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரதிய கிசான் சங்க மாநிலச் செயலாளா் என்.வீரசேகரன்: மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பட்டா மாறுதல் முகாம்களை நடத்த வேண்டும். நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் ஆா்.ராஜாசிதம்பரம்: மத்திய அரசு ஆண்டுதோறும் விவசாய விளைபொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்வதில் எம்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை ஏற்று நியாயமான விலையை நிா்ணயிக்க வேண்டும். இந்த நடைமுறையை சட்டப்பூா்வமாக்க வேண்டும் என்றாா்.

இதேபோல, பல்வேறு சங்க நிா்வாகிகள், விவசாயிகள், விவசாய தொழிலாளா்கள் பலரும் தங்களது குறைகளை தெரிவித்தனா். இதற்கு பதில் அளித்த ஆட்சியா், உரிய ஆவன செய்வதாகவும், அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டியவற்றை பரிந்துரை செய்து பெற்றுத்தருவதாக உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com