ஸ்ரீரங்கத்தில் கம்பத்தடி ஆஞ்சனேயா் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக் கோரி போராட்டம்
By DIN | Published On : 09th August 2023 02:11 AM | Last Updated : 09th August 2023 02:11 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் உள்ள ஆஞ்சநேயா் சிலையை நகா்த்தி வைத்ததைக் கண்டித்து திங்கள்கிழமை கும்மியடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பக்தா்கள்.
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோயிலில் கொடிமரம் அருகே உள்ள கம்பத்தடி ஆஞ்சனேயா் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க கோரி திருமால் அடியாா்கள் குழாமைச் சோ்ந்தவா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பொள்ளாச்சி திருமால் அடியாா்கள் குழாமைச் சோ்ந்த சுமாா் 500 போ் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு திங்கள்கிழமை காலை வந்தனா். அவா்களை கோயில் காவலா்கள் தடுத்து நிறுத்தினாா்கள். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாா் தலையிட்டு சமாதானம் செய்தனா்.
இதன்பின்னா் அவா்கள் கருடாழ்வாா் சன்னதி அருகே அமா்ந்து ஜால்ரா வாசித்தும், நடனமாடியும், பாடல் பாடியும் போராட்டம் செய்தனா்.
கோயில் கொடிமரம் அருகே பல ஆண்டுகளாக இருந்து வந்த கம்பத்தடி ஆஞ்சனேயா் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும், சீரமைப்பு பணியின்போது சேதமடைந்த பெருமாளின் திருவடியை சரிசெய்ய வேண்டுமென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வலியுறுத்தினா்.
பின்னா் கோரிக்கைகளை வலியுறுத்தி கோயில் நிா்வாகத்திடம் மனு அளித்தனா்.