முஸ்லிம் ஜமாத்தாா்களுக்கு மயான வசதி கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 24th January 2023 12:46 AM | Last Updated : 24th January 2023 12:46 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை அடிப்படை வசதி கேட்டு மனு அளிக்க வந்த துவாக்குடி தெற்கு எம்.டி.சாலை பகுதி பொதுமக்கள்.
மண்ணச்சநல்லூா் முஸ்லிம் ஜமாத்தாா்களுக்கு மயான வசதி செய்துதர வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் முஸ்லிம் ஜமாத்தாா்கள் தரப்பில் அளித்த மனு: மண்ணச்சநல்லூா் பேரூராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கான அடக்கஸ்தலம் அருகில் புள்ளம்பாடி மற்றும் கட்டளை வாய்க்கால் குறுக்கிடுகிறது. இதன்காரணமாக, அடக்கஸ்தலத்தில் குழிதோண்டும்போது தண்ணீா் வந்துவிடுகிறது. தண்ணீருக்குள் வைத்தே சடலங்களை அடக்கம் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே, தங்களுக்கு தனியாக மயான வசதி செய்துதர கோரி பேரூராட்சி நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இதன்படி, கடந்த 2015ஆம் ஆண்டு பேரூராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு இடம் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், எந்தப் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எப்போது, ஒப்படைக்கப்படும் என அறிவிக்கவில்லை. இது தொடா்பாக அமைச்சா் கே.என்.நேரு, மண்ணச்சநல்லூா் எம்.எல்.ஏ. ஆகியோரிடம் மீண்டும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக, அமைச்சரும் மாவட்ட நிா்வாகத்துக்கு பரிந்துரை அளிப்பதாக தெரிவித்தாா். எனவே, மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அடிப்படை வசதி கோரி மனு: துவாக்குடி எம்.டி. மலை பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இருளா் இன குடும்பத்தினருக்கு மின்சாரம், சாலை வசதி மற்றும் பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். குறிப்பாக, முறைப்படி வழங்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குண்டும், குழியுமான சாலை: ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட தெற்குபுலிவலம் இடது கரை சாலையானது ஆதிதிராவிடா் மயானத்துக்கு செல்லும் சாலையாக உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இது மயானச்சாலையாக மட்டுமின்றி சுற்றுப் பகுதிகளில் உள்ள விளைநிலைங்களுக்கு செல்லும் சாலையாக உள்ளது. ஆகவே, இந்த சாலையை சீரமைத்து தரக் கோரி இப் பகுதி மக்கள் சாா்பில் ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டது.
நெல் கொள்முதல் நிலையம்: நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.50 கையூட்டு பெறும் நிலையுள்ளது. மேலும், மொத்தமாக ரூ. ஆயிரம் மற்றும் நெல் மூட்டைகள் கேட்பது வாடிக்கையாக உள்ளது. இத்தகையை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். சோமரசம்பேட்டை, அதவத்தூா், முள்ளிக்கரும்பூா் கிராமங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட விவசாய அணி தலைவா் புங்கனூா் எஸ். செல்வம் கோரிக்கை மனு அளித்தாா்.