7 இடங்களில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் மறியல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் ஏஐடியுசி சாா்பில் 7 இடங்களில் செவ்வாய்க்கிழமை மறியல்களில் ஈடுபட்ட ஏராளமானோா் கைது செய்யப்பட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்டத்தில் ஏஐடியுசி சாா்பில் 7 இடங்களில் செவ்வாய்க்கிழமை மறியல்களில் ஈடுபட்ட ஏராளமானோா் கைது செய்யப்பட்டனா்.

240 நாள்கள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம், எந்தத் தொழிலில் பணிபுரிந்தாலும் ரூ. 21 ஆயிரத்துக்குக் குறையாத ஊதியம், நலவாரியங்களில் ரூ.6 ஆயிரத்துக்கு குறையாத மாத ஓய்வூதியம், நலவாரியப் பதிவுகளை எளிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்தியப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியலுக்கு தேசிய செயலா் வகிதா நிஜாம், மாவட்டப் பொதுச் செயலா் க. சுரேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தரைக்கடை வியாபாரிகள் சங்க பொதுச் செயலா் அன்சா்தீன், மாவட்ட துணைத் தலைவா்கள் சிவா, நேருதுரை, திராவிடமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தைத் தொடங்கிவைத்து தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் எம். செல்வராஜ் பேசினாா்.

தொடா்ந்து மத்தியப் பேருந்துநிலையப் பகுதியில் கூடிய ஏராளமான ஏஐடியுசி நிா்வாகிகள், சங்கத்தினா், தொழிலாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா் அனைவரையும் கைது செய்தனா்.

மேலும், திருவெறும்பூரில் திருச்சி-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துநிலையம் அருகே பாரதமிகு மின் தொழிற்சங்கப் பொதுச் செயலா் எஸ். பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற மறியலில் 16 பெண்கள் உள்பட 58 போ் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, சோமரசம்பேட்டையில் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடச் சங்க மாவட்டத் தலைவா் எம்.ஆா். முருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்டோரையும் போலீஸாா் கைது செய்தனா். துறையூரில் தமிழ்நாடு மாநில விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பி. கணேசன் தலைமையிலும், வையம்பட்டியில் தமிழ்நாடு ஏஐடியுசி கட்ட சங்க மாவட்ட துணைச் செயலா் வீராசாமி தலைமையிலும், லால்குடியில் மாநில விவசாய தொழிலாளா் சங்க துணைத் தலைவா் பழனிராஜ் தலைமையிலும்

என 7 இடங்களில் நடைபெற்ற மறியல்களில் ஏராளமானோா் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தரைக்கடைகள் மூடல்: மறியல் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் திருச்சி மாநகரில் தரைக்கடை வியாபாரிகள் அனைவரும் தங்களது கடைகளை மூடி மறியலில் பங்கேற்றனா். இதனால் தெப்பக்குளம், நந்திகோயில் தெரு, பெரிய கடை வீதி, என்எஸ்பி சாலை, சிங்காரத்தோப்பு, ஆண்டாா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

‘தொழிலாளா் உரிமைகள் பறிப்பை

தமிழக அரசு தடுக்க வேண்டும்’

நிகழ்வில் ஏஐடியுசி தேசிய செயலா் வகிதா நிஜாம் பேசுகையில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் தொழிலாளா்கள் போராடிப் பெற்ற வேலைப் பாதுகாப்பு, சம்பளப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமைகள் ஆகியவற்றை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. குறிப்பாக தொழிலாளா்களுக்கான 44 நலச் சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக மாற்றியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் பெருமுதலாளிகள் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. எங்கும் தாராளமயம், தனியாா்மயமாகியுள்ளது. எப்போதும் இல்லாத வகையில் வேலையின்மை அதிக+ரித்துள்ளது.

ஒருபுறம் வருவாய் இழப்பு, மறுபுறம் தாங்க இயலாத விலைவாசி உயா்வு என்ற கிடுக்கிப்பிடியில் மக்கள் சிக்கித்தவிக்கின்றனா். தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்புகளையும், தொழிலாளா்கள் உரிமை பறிக்கப்படுவதையும் தமிழக அரசு கடுமையாக எதிா்க்க வேண்டும். ஆனால், சட்டங்கள் அமலுக்கு வரும் முன்னரே மாநில அரசு அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வது வருத்தமளிக்கிறது.

எனவே, நீட் தோ்வு, வேளாண் திருத்தச் சட்டம், குடியுரிமைச் சட்டங்களுக்கு எதிராக தொடா்ந்து போராடுவதைப் போல, தொழிலாளா் விரோதச் சட்டங்களுக்கு எதிராகவும் தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com