பணியில் மெத்தனம்: 2 எஸ்.எஸ்.ஐ., காவலா் ஆயுதப்படைக்கு மாற்றம்
By DIN | Published On : 01st July 2023 01:40 AM | Last Updated : 01st July 2023 01:40 AM | அ+அ அ- |

பணியில் மெத்தனமாக இருந்த திருச்சி மாநகர விபசார தடுப்புப் பிரிவில் பணியாற்றிய 2 சிறப்பு உதவி ஆய்வாளா்கள், ஒரு காவலா் ஆகிய மூவரும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் எம். சத்தியபிரியா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் மாவட்ட ஆட்சியரக சாலை பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விபசார தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கருணாகரன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த சென்டரில் பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மையத்தின் மேலாளரை போலீஸாா் கைது செய்து, அங்கிருந்த மூன்று பெண்களையும் மீட்டனா்.
ஏற்கெனவே அந்த மையத்தின் மீது புகாா் எழுந்த நிலையில், விபசார தடுப்புப் பிரிவு போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையா் எம்.சத்தியபிரியா, ஏற்கெனவே அப்பிரிவில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பாலசரஸ்வதி, ராஜ்மோகன் மற்றும் காவலா் அத்தாலி உள்ளிட்ட மூவரையும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டாா்.