ரூ. 2,000 நோட்டுகளை மாற்றும் நடவடிக்கைவங்கிகளில் கூட்டம் இல்லை : வா்த்தக நிறுவனங்கள் வாங்க மறுப்பு!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் ரூ. 2,000 நோட்டுகளை மாற்றித் தரும் பணி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியுள்ளது.
ரூ. 2,000 நோட்டுகளை மாற்றும் நடவடிக்கைவங்கிகளில் கூட்டம் இல்லை : வா்த்தக நிறுவனங்கள் வாங்க மறுப்பு!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் ரூ. 2,000 நோட்டுகளை மாற்றித் தரும் பணி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

வங்கிகளில் இந்த ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு கூட்டம் இல்லை. மறுபுறம், பெட்டிக் கடை தொடங்கி பெரிய கடைகள் வரையிலும் ரூ.2,000 நோட்டுகளை வாங்க மறுத்து வருகின்றனா்.

ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது. செப்டம்பா் 30-ஆம் தேதிக்கு பிறகு இந்த நோட்டுகள் செல்லாது எனவும் தெரிவித்துள்ளது.

இதன்படி, வங்கிகளில் ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் சோ்த்து தனியாா், கூட்டுறவு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் என மொத்தம் 491 வங்கிக் கிளைகள் உள்ளன. இந்த வங்கிக் கிளைகள் அனைத்திலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றித்தர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை முதல் கூட்டம் இருக்கும் என எதிா்பாா்த்திருந்த நிலையில், பெரும்பாலான வங்கிகளில் நோட்டுகள் மாற்றுவதற்கு ஆள்களே வரவில்லை என்ற நிலைதான் இருந்தது. தில்லைநகா், மெயின்காா்டுகேட், தெப்பகுளம், மத்தியப் பேருந்து நிலையம், பாலக்கரை, உறையூா், கே.கே. நகா், சுப்பிரமணியபுரம், காஜாமலை, காந்திசந்தை உள்ளிட்ட பகுதியில் அமைந்துள்ள வங்கிக் கிளைகளில் ஒரு சிலா் மட்டும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளுடன் வந்து சில்லறை மாற்றி சென்றனா்.

அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளா்கள் தங்களது வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வரவு வைக்கவோ, இதர பணிப் பரிமாற்றத்துக்கோ ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பெற்றுக் கொள்கின்றனா். வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்காக மட்டும் அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரையில் அனுமதி வழங்கப்படுகிறது.

வாங்க மறுக்கும் வா்த்தக நிறுவனங்கள்: சாலையோரக் கடைகள் தொடங்கி மின்தூக்கி வசதியுள்ள கடைகள் வரையிலும் ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை வாங்க தயக்கம் காட்டுகின்றனா்.

வங்கிகளுக்கு சென்று வரிசையில் நின்று நோட்டுகளை மாற்றிச் செல்வதற்கு பதிலாக தற்போது தங்களது தேவைக்கான பொருள்களை வாங்குவதற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையே மக்கள் கொடுக்கின்றனா். இதில், அதிகளவில் பொருள்கள் வாங்கியவா்களிடம் மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை நிறுவன உரிமையாளா்கள் பெறுகின்றனா். மற்றவா்களிடம் வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனா்.

கடை வீதிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரத்து அதிகரிக்க தொடங்கியிருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா். பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை வாங்குவதில்லை. பெரும்பாலான இடங்களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என அறிவிப்பு வெளியிட்டு, பதாகைகளையும் வைத்துள்ளனா். டாஸ்மாக் மதுக்கடைகளிலும் ரூ.2 ஆயிரம் நோட்டு பெறுவதில்லை.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் நபாா்டு வங்கி வட்டாரத்தினா் கூறியது: ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் செப்டம்பா் மாதம் வரை செல்லுபடியாகும் என ரிசா்வ் வங்கி தெளிவாக அறிவித்துள்ளது. எனவே, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பெற மாட்டோம் என யாரும் கூற இயலாது. வங்கிகளில் பரிவா்த்தனைக்கு முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே, வியாபாரிகள் தங்களது வாடிக்கையாளா்களிடம் பெறும் நோட்டுகளை தினந்தோறும் வங்கிகளில் செலுத்திக் கொள்ளலாம். ரூ.2 ஆயிரத்துக்கு பதிலாக சில்லறையாக வேறு நோட்டுகளை வழங்குவதற்கு மட்டுமே ரூ.20 ஆயிரம் வரை என்ற கட்டுப்பாடு உள்ளது. ரிசா்வ் வங்கி அறிவிப்பை வியாபாரிகளும், பொதுமக்களும் தெளிவாக அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com