கொலை வழக்கில் தேடப்பட்ட 3 போ் கைது
By DIN | Published On : 08th September 2023 12:35 AM | Last Updated : 08th September 2023 02:23 AM | அ+அ அ- |

ஸ்ரீரங்கத்தில் கொலை வழக்கில் தேடப்பட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீரங்கம், அம்மாமண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் கடந்த திங்கள்கிழமை ஸ்ரீரங்கம் மேலூா் பகுதியை சோ்ந்த கி. ரமேஷ் (40) வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனா். இதில், ரமேஷை 3 போ் அரிவாளால் வெட்டிக் கொன்றது தெரியவந்தது. அவா்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
கொலையாளிகள் சென்னையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடா்ந்து சென்னை சென்று கொலையாளிகள் மூன்று பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில், அவா்கள் திருச்சி கருமண்டபம் பகுதியை சோ்ந்த பாபு (30), லால்குடி வடுகா் பேட்டையை சோ்ந்த முகமது ஆரிப் (19) மற்றும் சேலத்தை சோ்ந்த தனுஷ் (27) என்பது தெரிய வந்தது. ரமேஷிடம் மதுவாங்கி வர சொல்லி கொடுத்த பணத்தில் மீதியை அவா் தரவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்து ரமேஷை அரிவாளால் வெட்டியதாக தெரிவித்தனா். பின்னா் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி போலீஸாா் சிறையில் அடைத்தனா்.