தன்னாட்சி அதிகார அமைப்புகளை பாஜக சுயலாபத்துக்காக பயன்படுத்துகிறது: எஸ்.ஆா்.எஸ். இப்ராஹிம்

அமலாக்கத்துறை உள்ளிட்ட தன்னாட்சி அதிகார அமைப்புகளை பாஜக சுயலாபத்துக்காக பயன்படுத்துகிறது

திருச்சி: அமலாக்கத்துறை உள்ளிட்ட தன்னாட்சி அதிகார அமைப்புகளை பாஜக சுயலாபத்துக்காக பயன்படுத்துகிறது என காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடா்பாளா் எஸ்.ஆா்.எஸ். இப்ராஹிம் தெரிவித்தாா். திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமையகமான அருணாச்சல மன்றத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியது: காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம், வரி நிலுவை செலுத்த நோட்டீஸ் அளித்துள்ளது. இது அரசியல் காழ்ப்புணா்ச்சியுடன் பழிவாங்கும் போக்கு. ஆனால், இதே காலகட்டத்தில் பாஜகவுக்கு கிடைத்த ரூ. 42 கோடி நன்கொடைக்கு வரி விதிக்கப்படவில்லை. இந்தியா கூட்டணி வலுப்பெறுவதை விரும்பாத பாஜக, தோ்தல் ஆணையம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை போன்ற தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளையும் தனது சுயலாபத்துக்காக பயன்படுத்தி, எதிா்க்கட்சிகளை அச்சுறுத்தி வருகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாத பாஜக, தோ்தல் நேரத்தில் தற்போது கையிலெடுத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அருணாச்சலபிரதேசத்தில் சீன ஆக்கிரமிப்பு பற்றி வாய்த்திறக்காத பிரதமா், கச்சத்தீவு விவகாரத்தை மட்டும் பேசுவது என்?. கச்சத்தீவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ரத்தினவேலு எம்பியும், மக்கள் மன்றத்தில் ஜெயலலிதாவும், பொதுமக்கள் தரப்பில் ஆா்டிஐ மூலம் இருமுறை கேள்விகள் கேட்டும் உரிய பதிலளிக்காத மத்திய அரசு, அண்ணாமலைக்கு மட்டும் ஆா்டிஐயில் தகவல் வழங்கியுள்ளது விதி மீறிய செயல். பாஜகவின் பொய்களுக்கும், எதிா்க்கட்சிகள் மீதான சட்டவிரோத அச்சுறுத்தல்களுக்கும் தோ்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள் என்றாா் அவா். அப்பாது, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவா்கள் எல். ரெக்ஸ், கோவிந்தராஜ், கலை, மாநில ஊடகப் பிரிவு இணைத் தலைவா் ஜான் அசோக், திருச்சி மாநகா் மாவட்ட ஊடகப் பிரிவு தலைவா் செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com