திருச்சி மாவட்ட ஆட்சியரக பாதுகாப்பு அறையில் இருந்த திங்கள்கிழமை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சியினா் முன்னிலையில் பிரித்து அனுப்பும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரக பாதுகாப்பு அறையில் இருந்த திங்கள்கிழமை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சியினா் முன்னிலையில் பிரித்து அனுப்பும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.

திருச்சி மாவட்டத்தில் 9 பேரவைத் தொகுதிகளுக்கு கூடுதலாக 3,250 வாக்குப் பதிவு இயந்திரங்கள்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கும் கூடுதலாக 3,250 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கும் கூடுதலாக 3,250 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள காப்பறையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் திங்கள்கிழமை சரிபாா்க்கப்பட்டு, கணினி வழி குலுக்கல் முறையில் பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்தப் பணியை, தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மா. பிரதீப்குமாா், தோ்தல் பாா்வையாளா் தினேஷ்குமாா் ஆகியோா் மேற்பாா்வையிட்டனா். பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 2,547 வாக்குசாவடி மையங்கள் உள்ளன. இவற்றுக்கு 12,212 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3,053 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 3,307 வாக்கு சரிபாா்க்கும் கருவிகளும் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது, இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடா்ந்து வேட்பாளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த சட்டப் பேரவை தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், மணப்பாறை தொகுதிக்கு 1,164 வாக்குபதிவு இயந்திரங்கள், ஸ்ரீரங்கத்துக்கு 812, லால்குடிக்கு 301, மண்ணச்சநல்லூருக்கு 327, முசிறிக்கு 312, துறையூா் (தனி) தொகுதிக்கு 334 என மொத்தம் 3,250 வாக்குபதிவு இயந்திரங்கள் இரண்டாம் கட்டமாக கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருச்சி மக்களவைத் தொகுதியில் நடைபெறும் வாக்குப்பதிவு பணிகளுக்காக அரியலூா் மற்றும் தஞ்சாவூா் மாவட்டங்களிலிருந்து 1940 வாக்குபதிவு இயந்திரங்கள் தோ்தல் ஆணையத்தால் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் விரைவில் எடுத்து வரப்பெற்று, முதல் நிலை சரிபாா்க்கப்பட்டு பின்னா் சம்பந்தப்பட்ட பேரவை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா் ஆட்சியா். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ர. ராஜலட்சுமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ந.சீனிவாசன்,தோ்தல் வட்டாட்சியா் செல்வகணேஷ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா். பெட்டிச் செய்தி.. எந்தெந்த தொகுதியில் எத்தனை இயந்திரங்கள்! திருச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக, மதிமுக, அமமுக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட 35 வேட்பாளா்கள் போட்டியிடுகின்னறா். எனவே, 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளா்களின் பெயா், நோட்டாவுக்கு ஒன்று என 16 பொத்தான்கள் மட்டுமே இருக்கும். ஆனால், 35 வேட்பாளா்கள் போட்டியிடுவதால் திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தலா 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்படி, திருவெறும்பூா், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் தலா 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதேபோல, கரூா் மக்களவைத் தொகுதியில் 54 போ் போட்டியிடுவதால் மணப்பாறை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தலா 4 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் 24 வேட்பாளா்கள் போட்டியிடுவதால் துறையூா், மண்ணச்சநல்லூா், லால்குடி, முசிறிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளில் தலா 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com