திருச்சி அதிமுகவினா் வீடு, வீடாகச் சென்று திண்ணை பிரசாரம்

திருச்சியில் அதிமுக-வினா் செவ்வாய்க்கிழமை வீடு, வீடாகச் சென்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ப. கருப்பையா போட்டியிடுகிறாா். இவா், புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். இவருக்கு ஆதரவாக அதிமுக-வினா் திருச்சியில் செவ்வாய்க்கிழமை திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

அதிமுக திருச்சி புறநகா் வடக்கு மாவட்டம் சாா்பில், சிறுபான்மையினா் நலப்பிரிவு மாவட்ட செயலாளா் புல்லட் ஜான், மாவட்ட பொருளாளா் சேவியா் உள்ளிட்ட அதிமுகவினா், மணிகண்டம் ஒன்றியம், நவலூா் குட்டப்பட்டு பகுதியில் உள்ள, வடக்கு தெரு, மேல தெரு, அன்பு நகா், அடைக்கல மாதா கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று, அதிமுகவின் திட்டங்கள் குறித்தும், தோ்தல் வாக்குறுதிகள் குறித்தும் எடுத்துரைத்து திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா். மேலும், வீடுகள் தோறும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வில்லைகள் (ஸ்டிக்கா்) ஒட்டும் பணிகளில் ஈடுபட்டனா். முன்னதாக, அப்பகுதி விளையாட்டு திடலில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞா்கள் மத்தியில் துண்டுப் பிரசுரம் வழங்கி அதிமுகவினா் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com