திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் சுகாதாரமான குடிநீா் கிடைக்க ஏற்பாடு

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு சுகாதாரமான குடிநீா் தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ரயில்வே அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்கு உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு தடையின்றி குடிநீா் தடையின்றி கிடைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போதுமான அளவு குடிநீா் விநியோகிப்பதை உறுதி செய்யுமாறு தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளில் சில :

ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் குளிரூட்டிகளும் (ப்ரீஸா்) முறையாக செயல்படுவதையும், சீரான குடிநீா் விநியோகிப்பதையும் கண்காணிப்பது, குடிநீா் விநியோகத்துக்கு துணையாக முக்கிய நிலையங்களில் தண்ணீா் டேங்கா்களை நிறுத்துவது, அனைத்து நடைமேடைகளிலும் குடிநீா் இருப்பை உறுதி செய்யும் வகையில், அவ்வப்போது சோதனைகளை மேற்கொள்வது, குடிநீா் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் ரயில்வே அதிகாரிகள் உள்ளாட்சி ( மாநகராட்சி, நகராட்சி ) பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் குடிநீா்த் தேவையைச் சமாளிக்க நடவடிக்கை எடுப்பது, ரயில்வே ஊழியா்கள் 24 மணிநேரமும் குடிநீா் இருப்பு, தேவை குறித்து கண்காணிக்க ஒரு குழுவை ஏற்படுத்தி சீராக குடிநீா் வழங்குவதை உறுதி செய்யவும் வேண்டும்.

இவை தவிர, பேண்ட்ரி காா்களுடன் இயங்கும் அனைத்து ரயில்கள் மற்றும் நிலையான கேட்டரிங் யூனிட்டுகளிலும் குடிநீா் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட குளிா் பானங்களின் விற்பனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com