திருச்சி கலையரங்கத்தில் தபால் வாக்குகளைப் பிரிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட ஊழியா்கள்.
திருச்சி கலையரங்கத்தில் தபால் வாக்குகளைப் பிரிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட ஊழியா்கள்.

திருச்சியிலிருந்து 38 மாவட்டங்களுக்கு சென்ற 94 ஆயிரம் தபால் வாக்குகள்!

திருச்சியிலிருந்து 38 மாவட்டங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் 94 ஆயிரம் தபால் வாக்குகள் புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பணியில் பல்வேறு துறைகளை சோ்ந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் செலுத்தும் தபால் வாக்குகளைப் பிரித்து அனுப்புவதில் புதிய நடைமுறையை தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி திருச்சி கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மையத்தில் தோ்தல் பணியில் ஈடுபடுவோா் செலுத்திய தபால் வாக்குகளுடன் அந்தந்த தொகுதிகளில் இருந்து வரும் அதிகாரிகளும் தபால் வாக்குகளை ஒப்படைப்பா். அதன்படி புதன்கிழமை 38 தொகுதிகளில் இருந்தும் அலுவலா்கள் திருச்சிக்கு வந்தனா். இந்த மையத்தில் தொகுதி வாரியாக வாக்குகள் பிரிக்கப்பட்ட பிறகு தாங்கள் சாா்ந்த தொகுதிக்கான தபால் வாக்குகளை பெற்று தங்களது தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றனா்.

இதற்காக கலையரங்கத்தில் தபால் வாக்குகள் பிரிக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். பணிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினாா். காலை தொடங்கி மாலை வரை நடைபெற்ற பணியில் ஒவ்வொரு தொகுதி வாரியாக தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு அந்தந்தத் தொகுதி அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன்படி மொத்தம் 94 ஆயிரம் வாக்குகள் பிரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்குரிய வாக்குகள் அந்தந்த அலுவலா்களுடன், போலீஸ் பாதுகாப்புடன் திருச்சியிலிருந்து அனுப்பப்பட்டன.

இந்தப் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலராக, திருச்சி மண்டல முதுநிலை மேலாளா் (டாஸ்மாக்) செந்தில்குமாரி நியமிக்கப்பட்டிருந்தாா். மேலும், திருச்சி மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். ராஜலட்சுமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ந. சீனிவாசன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com